மோகனூர் அருகே: தபால் அலுவலகத்தில் சேமிப்பு பணம் மோசடி - வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு


மோகனூர் அருகே: தபால் அலுவலகத்தில் சேமிப்பு பணம் மோசடி - வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 27 Nov 2018 10:00 PM GMT (Updated: 27 Nov 2018 8:27 PM GMT)

மோகனூர் அருகே தபால் அலுவலகத்தில் சேமிப்பு பணம் மோசடி செய்யப்பட்டு இருப்பதாக கூறி வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மோகனூர், 

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே உள்ள மணப்பள்ளியில் தபால் அலுவலக கிளை செயல்பட்டு வருகிறது. இதில் அதே பகுதியை சேர்ந்த செந்தில் (வயது 47) என்பவர் கிளை அஞ்சலக அலுவலராக வேலை பார்த்து வருகிறார். இவர் அகில இந்திய கிராம அஞ்சல் ஊழியர் சங்க நாமக்கல் மாவட்ட செயலாளராக உள்ளார்.

மணப்பள்ளி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கணபதிப ாளையம், தீர்த்தாம்பாளையம், ராமநாயக்கன்பாளையம், எல்லைகாட்டூர் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் (ஆர்.டி) சேர்ந்து தங்கள் வருமானத்திற்கேற்ப அஞ்சல் அலுவலகத்தில்சேமித்தும், டெபாசிட் செய்தும், இன்சூரன்ஸ் திட்டத்தில் பணம் செலுத்தியும் வருகின்றனர். சேமிப்பு கணக்கு தொடங்கி வரவு, செலவு வைத்துள்ளனர்.

இந்த நிலையில் இங்கு பணம் சேமிப்பு வைத்துள்ள பலருக்கு வரவு, செலவு கணக்கு புத்தகம் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் பணமோசடி நடந்துள்ளதாக சந்தேகம் அடைந்த சிலர் பாலப்பட்டி அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று தங்களது கணக்குகளை சரிபார்த்தனர். அப்போது வித்தியாசம் வருவதாக சந்தேகப்பட்ட பாலு என்பவர் நாமக்கல் அஞ்சல் அலுவலகத்தில் புகார் கொடுத்தார்.

இதைத்தொடர்ந்து அஞ்சலக அதிகாரிகள் மணப்பள்ளி கிளை தபால் அலுவலகத்தில் ஆய்வு செய்தனர். அப்போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பணம் அவர்களுடைய கணக்கில் வரவு வைக்காமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி குறித்து தகவல் அறிந்த வாடிக்கையாளர்கள் நேற்று தபால் அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். பல லட்சம் ரூபாய் மோசடி நடந்திருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தபால் துறை அதிகாரிகள் கேட்டபோது, முழுமையாக ஆய்வு செய்து கணக்குகளை சரிபார்த்த பின்னர்தான் மோசடி தொகை எவ்வளவு என்பது தெரிய வரும், என்றனர்.

Next Story