கடனை திருப்பி செலுத்தாததால் : மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரின் மகன் கடத்தல் - பெண் கைது


கடனை திருப்பி செலுத்தாததால் : மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினரின் மகன் கடத்தல் - பெண் கைது
x
தினத்தந்தி 28 Nov 2018 3:45 AM IST (Updated: 28 Nov 2018 2:12 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுயஉதவிக்குழுவில் பெற்ற கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் உறுப்பினரின் மகனை கடத்திய குழுவின் தலைவியை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

போடி, 

போடி பரமசிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜு. இவருடைய மனைவி சுலோச்சனா (வயது 48). இவர் மகளிர் சுயஉதவிக்குழு தலைவியாக உள்ளார். இந்த குழுவில் குலாலர்பாளையத்தை சேர்ந்த வீரணன் மனைவி ராணி (29) என்பவர் உறுப்பினராக உள்ளார். இவர் குழுவில் இருந்து ரூ.25 ஆயிரம் கடன் வாங்கியிருந்தார். அந்த தொகையை 5 நாட்களுக்கு ஒரு முறை தவணையாக செலுத்தி வந்தார். கடந்த 2 மாதங்களாக கடன் தொகையை ராணி செலுத்தவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சுலோச்சனா, ராணியின் வீட்டிற்கு வந்து பணத்தை திருப்பி கேட்டதாக தெரிகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வரும் ராணியின் மகன் செல்வகணபதி (11) வீடு திரும்பவில்லை. பள்ளி முடிந்து நீண்ட நேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் பதறிப்போன ராணி அக்கம்பக்கத்தில் தேடி பார்த்தார். பின்னர் அவனுடைய நண்பர்களிடம் விசாரித்தபோது, செல்வகணபதியை சுலோச்சனா கடத்தி சென்றது தெரியவந்தது.

இதற்கிடையே ராணியின் செல்போனுக்கு பேசிய சுலோச்சனா, கடன் தொகையை செலுத்திவிட்டு மகனை அழைத்து செல்லும்படி கூறினார். இதனை கேட்ட ராணி அதிர்ச்சி அடைந்தார். உடனே போடி நகர் போலீஸ் நிலையத்தில் ராணி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சுலோச்சனாவின் வீட்டுக்கு சென்று செல்வகணபதியை மீட்டு ராணியிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். சுயஉதவிக்குழுவில் பெற்ற கடன் தொகையை செலுத்தாததால் சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் போடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story