மின்சார வாரியத்தில் பணியாற்றும்: ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் - ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்


மின்சார வாரியத்தில் பணியாற்றும்: ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் - ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம்
x
தினத்தந்தி 28 Nov 2018 3:15 AM IST (Updated: 28 Nov 2018 2:25 AM IST)
t-max-icont-min-icon

மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என்று ஏ.ஐ.டி.யு.சி. மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை,

ஏ.ஐ.டி.யு.சி. சங்க 15-வது மாவட்ட கவுன்சில் மாநாடு கோவை பாலன்நகரில் உள்ள கண்டியப்பன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ஆர்.ஏ.கோவிந்தராஜன் தலைமை தாங்கினார். இதில், ஏ.ஐ.டி.யு.சி. மாநில தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.சுப்பராயன், மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி, செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.இதில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கோவை மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக அளவில் பணிபுரிகிறார்கள். அவர்க ளுக்கு புலம் பெயர்ந்த தொழிலாளர் நலச்சட்டத்தை அமல்படுத்த வேண்டும். கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பெண் தொழிலாளர்கள் முகாம்களில் அடைத்து வைத்து வேலை வாங்கப்படுகிறார்கள். அங்கு தொழிலாளர் நலச்சட்டங்கள் அமலாக்கப்படுவது இல்லை.

முகாம்களில் தொழிலாளர்களை தங்கவைத்து வேலை வாங்குபவர்கள் மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்றுத்தான் தொழிலாளர்களை தங்க வைக்க வேண்டும். ஆனால் மாவட்டத்தில் இயங்கும் பல நிறுவனங்கள் அத்தகைய அனுமதியை பெறவில்லை. எனவே, இதை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து அனுமதி பெறாத நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத்திய அரசு மின் திருத்த சட்டம் 2018-ஐ கொண்டு வர உள்ளது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டால் மின்சாரம், மாநிலத்தின் கட்டுப்பாட்டில் இருந்து மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். இதனால் ஏழைகள், விவசாயிகள், விசைத்தறிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் மற்றும் குறைந்த விலை மின்கட்டண முறைகள் அனைத்தும் ரத்தாகி விடும். இதனால் மாநிலத்தின் வளர்ச்சி மிகவும் பாதிக்கப்படும். எனவே மின்திருத்த சட்டத்தை கைவிடவேண்டும்.

தமிழக மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக பல ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் 2012-ல் கடலூரை தாக்கிய தானே புயல், 2016-ல் சென்னையை தாக்கிய வர்தா புயல், 2017-ல் தாக்கிய ஒகி புயல், இந்த ஆண்டு நாகை, தஞ்சை, புதுக்கோட்டையை தாக்கிய கஜா புயல் ஆகிய பாதிப்புகளில் முழுமையாக தங்களை பணியில் ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

இவர்களது பணி என்பது எவ்வித உத்தரவாதமும் இல்லாத ஒன்றாக உள்ளது. எனவே, மின்வாரியத்தில் பணியாற்றிவரும் ஒப்பந்த பணியாளர்கள் அனைவரையும் நிரந்தரமாக்க வேண்டும்.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் மாவட்ட தலைவராக ஆர்.ஏ.கோவிந்தராஜன், மாவட்ட பொது செயலாளராக சி.தங்கவேல், பொருளாளராக பி.சுப்பிரமணியம், துணைத் தலைவர்களாக பி.ஜெகநாதன், எஸ்.மோகன், ஆர்.பாலகிருஷ்ணன், என்.கணேசன், சி.வி.சுப்பிரமணியம், துணை செயலாளர்களாக கே.எம்.செல்வராஜ், பி.பாலாஜி, எம்.சண்முகம், கே.ஜி.ஜெகநாதன், டி.கந்தவேல் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story