ரோடியர் மில் தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்


ரோடியர் மில் தொழிலாளர்கள்  தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:15 AM IST (Updated: 28 Nov 2018 3:02 AM IST)
t-max-icont-min-icon

சம்பளம் வழங்கக்கோரி ரோடியர் மில் தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவையில் புகழ்பெற்ற ரோடியர் மில்லின் பல்வேறு பகுதிகள் வெவ்வேறு காரணங்களால் மூடப்பட்டுள்ளன. இதில் ஐயங்குட்டிபாளையத்தில் உள்ள சி–யூனிட் (கேன்வாஸ் மில்) மட்டும் இயங்கி வந்தது.

இங்கு 110 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு கடந்த 4 மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் தீபாவளி போனசும் வழங்கப்படவில்லை. சம்பள பாக்கியை வழங்கக்கோரி தொழிலாளர்கள் பல்வேறுகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. முதல்–அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து பேசியும் பலனில்லை.

இதைத்தொடர்ந்து மில் தொழிலாளர்கள் 10–க்கும் மேற்பட்டோர் நேற்று மில் வளாகத்தில் உள்ள குடிநீர் தொட்டி மேல் சம்பளம் வழங்காவிட்டால் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் மேட்டுப்பாளையம் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று தொழிலாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஆனால் அவர்களது சமரசத்தை தொழிலாளர்கள் ஏற்கவில்லை.

மேலாண் இயக்குனர் வந்து சம்பளம் தொடர்பாக உறுதியளித்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று தெரிவித்தனர். அவர்களிடம் மேலாண் இயக்குனர் வந்து பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்கிறோம் என்று போலீசார் உறுதியளித்தனர். அதன்பின்னரே தொழிலாளர்கள் தண்ணீர் தொட்டி மேல் இருந்து கீழே இறங்கி வந்தனர்.


Next Story