அரசியல் கட்சிகள் எதிர்ப்பு: நாகர்கோவில்– கொச்சுவேளி பாசஞ்சர் இன்று முதல் ரத்து
அரசியல் கட்சிகள் எதிர்ப்பு எதிரொலியாக நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரெயில் இன்று முதல் ரத்து செய்யப்பட்டு, கன்னியாகுமரி எக்ஸ்பிரசை தனி ரெயிலாக இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தின் அடையாளமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் கருதப்படுகிறது. ஆனால் அப்படிப்பட்ட ரெயிலை மாற்று ரெயிலாக ரெயில்வே நிர்வாகம் பயன்படுத்தி வந்தது. முதலில் பெங்களூருவுக்கு ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயிலாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டது. இதனால் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தினமும் சென்னைக்கு தாமதமாக புறப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த சில மாதங்களாக தனி ரெயிலாக இயக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 15–ந் தேதி முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பகல்வேளையில் நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டது. இதன் காரணமாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் சென்னைக்கு புறப்படுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டது. இதனால் ரெயில்வே நிர்வாகத்தின் இந்த மாற்று முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரசை மீண்டும் தனி ரெயிலாக இயக்க வேண்டும் என்று வலியுறுத்தி அரசியல் கட்சிகள் ரெயில் மறியல் போராட்டம் நடத்தினர். குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. அதன் கூட்டணி கட்சிகளுடன் இணைந்து ரெயில் மறியல் செய்தார்கள்.
கொச்சுவேளி பாசஞ்சர் ரெயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டதால், இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் ரெயில்வே அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையின் முடிவில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரெயிலாக மாற்றி இயக்குவதை கைவிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரசை மீண்டும் தனி ரெயிலாக இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இன்று (புதன்கிழமை) முதல் நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்படுகிறது. எனவே இனி கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் சரியான நேரத்துக்கு அதாவது மாலை 5.20 மணிக்கு கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு புறப்படும். இந்த தகவலை ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்படுவதால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதே போல திருவனந்தபுரத்தில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அமிர்தா ரெயில் பராமரிப்பு பணிக்காக நாகர்கோவிலுக்கு கொண்டுவரப்படாது என்றும் அதிகாரிகள் கூறினர்.