பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சுகாதார தொழிலாளர்கள்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட சுகாதார தொழிலாளர்கள்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:15 AM IST (Updated: 28 Nov 2018 4:04 AM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தை சுகாதார தொழிலாளர்கள் முற்றுகையிட்டனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 1–வது மற்றும் 4–வது மண்டலங்களில் பணியாற்றும் சுகாதார தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்ட சுகாதார தொழிலாளர்கள் சங்கத்தினர் ஏராளமானோர் நேற்று மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அவர்கள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சிறிது நேரம் போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாநகராட்சி அலுவலகத்தில் மனு ஒன்றை கொடுத்தனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

திருப்பூர் மாநகராட்சி 1–வது மண்டலம், 2–வது மண்டலத்தில் பணியாற்றும் 95 தொழிலாளர்களுக்கு ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான நிலுவை தொகையையும், 11 தொழிலாளர்களுக்கு 8–வது மாதத்திற்கான நிலுவை தொகையும் வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதை உடனடியாக வழங்க வேண்டும். சில மண்டலங்களில் 2018–ம் ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கான ஒப்படைப்பு தொகையும் நிலுவையில் உள்ளது.

இதையும் உடனடியாக வழங்க வேண்டும். பணி ஓய்வு பெற்று பல வருடங்கள் ஆகியும் பல தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்கப்படாமல் உள்ளது. இவற்றையும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 2018–ம் ஆண்டுக்கான சீருடைகள் ஜனவரி மாதமே வழங்கியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவை வழங்கப்படவில்லை. இதனால் உடனடியாக சீருடைகளை வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story