தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு


தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி - 2 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 Nov 2018 4:18 AM IST (Updated: 28 Nov 2018 4:18 AM IST)
t-max-icont-min-icon

தொழிலதிபரிடம் ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்ததாக 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி,

திருச்சி தில்லைநகர் பாரதிநகரை சேர்ந்தவர் சங்கரலிங்கம். தொழிலதிபரான இவர் திருச்சியில் செயல்பட்டு வரும் தனியார் சூரிய மின்சக்தி திட்ட நிறுவனத்தின் இயக்குனராக உள்ளார். இவர் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சியில் செயல்பட்டு வரும் எனது நிறுவனத்தில் சூரியமின்சக்தி திட்டத்துக்கான பொருட்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்து தருவதாக மதுரையை சேர்ந்த ஒரு என்ஜினீயரிங் நிறுவனம் கேட்டு வந்தது. இதையடுத்து கடந்த 2017-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடன் பொருட்கள் வாங்க ஒப்பந்தம் செய்தோம். இதற்காக அந்த நிறுவனத்துக்கு ரூ.2 கோடி வங்கி கணக்கு மூலம் அனுப்பினோம்.

பின்னர் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு தேவையான பொருட்கள் வாங்கியதாக குறுந்தகவல் வந்தது. ஆனால் பொருட்கள் குறைவாக இருந்ததால் சந்தேகம் அடைந்து சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் வங்கி ஆவணங்களை சோதனை செய்தபோது, ரூ.80 லட்சத்து 39 ஆயிரத்துக்கு மட்டுமே பொருட்கள் அனுப்பி இருந்தது தெரியவந்தது. இதனால் எங்கள் நிறுவனத்தை ஏமாற்றும் நோக்கில் போலியான ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை தகவல்களை வழங்கி உள்ளனர். ஆகவே ரூ.1 கோடியே 20 லட்சம் மோசடி செய்த நிறுவனதினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் மாநகர குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து மாநகர குற்றப்பிரிவு போலீசார் மதுரையை சேர்ந்த ஸ்ரீதர், திருவள்ளூர் காட்டுப்பாக்கத்தை சேர்ந்த ராமசுப்பிரமணியன் என்கிற ரவி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.



Next Story