புயல் பாதித்த பகுதிகளில் பாரபட்சமின்றி கணக்கெடுப்பு பணி அமைச்சர் காமராஜ் பேட்டி


புயல் பாதித்த பகுதிகளில் பாரபட்சமின்றி கணக்கெடுப்பு பணி அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2018 4:25 AM IST (Updated: 28 Nov 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

புயல் பாதித்த பகுதிகளில் பாரபட்சமின்றி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக அமைச்சர் காமராஜ் கூறினார்.

திருவாரூர்,

‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் திருவாரூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர்கள் காமராஜ், வீரமணி, மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ், மாவட்ட கண்காணிப்பு அதிகாரி மணிவாசன், போக்குவரத்து ஆணையர் சமயமூர்த்தி, மாவட்ட வருவாய் அதிகாரி சங்கரநாராயணன், உதவி கலெக்டர் முருகதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து தென்னவராயநல்லூரில் உள்ள மாங்குடி கூட்டுறவு வங்கியில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்கள் தொடர்பான விவரங்களை விவசாயிகள் பதிவு செய்வதை அமைச்சர்கள் காமராஜ், செல்லூர் ராஜூ, வீரமணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் அங்கு உள்ள ரேஷன் கடையில் அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு தடையின்றி கிடைக்கிறதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. கிராமப்புற பகுதிகளில் விரைவாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்கள் 199 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நாளை (இன்று) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்க உள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு இது கூடுதல் ஆறுதலாக இருக்கும்.

மேலும் நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் குப்பைகள் பெருமளவு அகற்றப்பட்டு விட்டது. கிராம பகுதிகளில் குப்பைகளை அகற்றும் பணி, 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைவருக்கும் நிவாரணம் கிடைப்பதற்காக, பாரபட்சமில்லாமல் கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story