கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் போராட்டம் - விவசாயிகள் ரெயிலில் டெல்லி பயணம்


கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் போராட்டம் - விவசாயிகள் ரெயிலில் டெல்லி பயணம்
x
தினத்தந்தி 28 Nov 2018 4:29 AM IST (Updated: 28 Nov 2018 4:29 AM IST)
t-max-icont-min-icon

கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாட்கள் போராட்டம் நடத்தப்படுவதையொட்டி திருச்சியில் இருந்து விவசாயிகள் ரெயில் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

திருச்சி,

விவசாய விளை பொருட்களுக்கு லாபகரமான விலை வழங்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட அனைத்து வங்கிகளிலும் விவசாயிகள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும். புயல் பாதிப்பால் சேதம் அடைந்த அனைத்து விவசாய பயிர்களுக்கும் உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாயிகள் ஒன்றிணைந்து டெல்லியில் நாளை(வியாழக்கிழமை) மற்றும் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) போராட்டம் நடத்த உள்ளனர்.

இதில் பங்கேற்பதற்காக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சியில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லி செல்ல புறப்பட்டனர். நேற்று காலை திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்துக்கு வந்த விவசாயிகள் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை சென்றனர். பின்னர் சென்னையில் இருந்து எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் டெல்லி செல்கிறார்கள். டெல்லி சென்றடைந்ததும், அங்கு 2 நாட்கள் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் டெல்லியில் பல்வேறு நூதன போராட்டங்களை நடத்தினார்கள். அது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட புறப்பட்டு சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



Next Story