நடிகர் அம்பரீசுக்கு அஞ்சலி செலுத்தாதற்கு காரணம் என்ன? நடிகை ரம்யாவின் ‘இன்ஸ்டாகிராம்’ பதிவு ‘வைரல்’
முன்னாள் மத்திய மந்திரியும், நடிகருமான அம்பரீஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவருக்கு அஞ்சலி செலுத்த நடிகை ரம்யா வரவில்லை. இந்த நிலையில், நடிகை ரம்யாவின் ‘இன்ஸ்டாகிராம்’ பதிவு ‘வைரல்’ ஆகியுள்ளது.
பெங்களூரு,
இந்த நிலையில், மண்டியா நாடாளுமன்ற தொகுதி முன்னாள் எம்.பி.யும், நடிகையும், அகில இந்திய காங்கிரஸ் சமூக வலைத்தள பிரிவு தலைவியுமான ரம்யா அஞ்சலி செலுத்த வராதது அம்பரீஷ் ஆதரவாளர்கள், ரசிகர்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் ரம்யாவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ரம்யாவின் இந்த செயல்பாட்டுக்கு பா.ஜனதாவினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் அம்பரீசுக்கு அஞ்சலி செலுத்த ரம்யா வராத நிலையில், அவருடைய ‘இன்ஸ்டாகிராம்’ பதிவு ஒன்று ‘வைரலாகி’ வருகிறது. அதில் தனது காலில் கட்டி இருந்ததாகவும், அதை அகற்றி அவர் கட்டுப்போட்டு இருக்கும் படம் இடம் பெற்றுள்ளது. மேலும் அந்த பதிவில் ரம்யா கூறியிருப்பதாவது:-அடுத்த சில வாரங்களுக்கு நான் இப்படி தான் இருப்பேன். தற்போது எனது கால் கட்டி மற்றும் புற்றுநோய் இன்றி உள்ளது. யாரேனும் உங்களின் உடலில் வலியை உணர்ந்தால் உடனடியாக டாக்டரை நாடுங்கள். என்னை போன்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள். தசைநார் மீது உருவாகும் கட்டியானது பெரும்பாலும் பெண்களை தாக்குகிறது. 10 லட்சம் பேரில் ஒருவருக்கு இந்த பாதிப்பு உள்ளது. இது தீங்கு இழைக்காது என்றாலும் வீரியமிக்கதாக மாறிவிடும். உடனடியாக கண்டுப்பிடித்து சிகிச்சை பெறுவதே சிறந்தது. என் உடலை எப்போதும் பேணி பாதுகாக்க வேண்டும் என்பது இதன் மூலம் எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாடம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவை நடிகை ரம்யா கடந்த அக்டோபர் மாதம் 19-ந் தேதி பதிவிட்டு உள்ளார். இருப்பினும், காலில் ஏற்பட்ட கட்டியால் தான் நடிகை ரம்யா, அம்பரீசுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை என்ற தகவல் இப்போது பரவி வருகிறது.