மாவட்ட வேலை வாய்ப்பு பதிவில் திருப்புவனம் தாலுகா பெயரை இடம்பெறச் செய்ய வேண்டும்; மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை
மாவட்ட வேலை வாய்ப்பு பதிவில் திருப்புவனம் தாலுகா பெயரை இடம் பெற செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்புவனம்,
திருப்புவனம் யூனியன், பேரூராட்சி பகுதிகள் மானாமதுரை தாலுகா அலுவலகத்தின் கீழ் கடந்த 7ஆண்டிற்கு முன்பு செயல்பட்டு வந்தது. இதனால் திருப்புவனம் யூனியன், பேரூராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் வருவாய்த்துறை சம்பந்தமான சான்றிதழ்கள், நலத்திட்ட உதவிகள் உள்பட அனைத்து தேவைகளுக்கும் சான்றிதழ் பெற மானாமதுரைக்கு சென்று வந்தனர்.
திருப்புவனத்தில் இருந்து மானாமதுரை பஸ் நிலையத்திற்கு சென்று அதன் பின்னர் அங்கிருந்து தாலுகா அலுவலகம் உள்ள சிப்காட் பகுதிக்கு சென்று வர வேண்டும். இதனால் பொதுமக்களுக்கு பண விரையம், நேர விரையம் ஏற்படடு வந்தது. இதனை கருத்தில் கொண்டு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் திருப்புவனத்தை தலைமையிடமாகக் கொண்டு தனித் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனை ஏற்று தமிழக அரசு கடந்த 2012–ம் ஆண்டு திருப்புவனத்தை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா அலுவலகத்தை அமைத்தது. அப்போது முதல் திருப்புவனம் புதூர் பகுதியில் வாடகை கட்டிடத்தில் புதிய தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அதன் பின்னர் ரூ.2 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் புதிய தாலுகா அலுவலகம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிவகங்கையில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் முன்பு மானாமதுரை தாலுகாவின் கீழ் திருப்புவனம் வட்டார மக்கள் தங்களது கல்வி சான்றிதழ், ஓட்டுநர் சான்றிதழ், பிற தொழில் துறை பயின்றவர்கள் தங்களது சான்றுகளை பதிவு செய்துள்ளனர். தற்போது தமிழக அரசு 10, 12–ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் படித்த பள்ளியிலேயே ஆன்–லைன் மூலம் வேலை வாய்ப்பு அலுவலக பதிவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. மற்றவர்கள் வேலை வாய்ப்பு பதிவுக்கு ஆன்–லைன் மூலம் பதிவு செய்யும் போது திருப்புவனம் தாலுகா என்று தனியாக இல்லை எனவும், மானாமதுரை தாலுகா தான் இன்று வரை உள்ளது என்றும் கூறி வருகின்றனர்.
மேலும் கணினி மையங்களில் பதிவு செய்யும் போது ஒரு சிலர் மானாமதுரை பெயரை போட்டு பதிவு செய்கின்றனர். சில இடங்களில் திருப்புவனம் தாலுகா பெயர் இல்லை என்று கூறுகின்றனர். இதனால் பதிவு செய்பவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர். தமிழக அரசால் திருப்புவனம் புதிய தாலுகா உருவாக்கப்பட்டு 7 ஆண்டுகளாகியும் மாவட்ட வேலை வாய்ப்பு பதிவில் திருப்புவனம் தாலுகா பெயரை இன்று வரை சேர்க்காமல் இருப்பது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு மாவட்ட வேலை வாய்ப்பு பதிவில் திருப்புவனம் தாலுகா பெயரை இடம் பெறச் செய்ய வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.