பெங்களூருவில் நடந்தது முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு


பெங்களூருவில் நடந்தது முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு
x
தினத்தந்தி 28 Nov 2018 4:50 AM IST (Updated: 28 Nov 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அரசு சார்பில் நேற்று முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் கலெக்டர்கள் மாநாடு நடைபெற்றது. வறட்சி நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தரவிட்டார்.

பெங்களூரு,

கர்நாடக அரசு சார்பில் மாவட்ட கலெக்டர்கள் மாநாடு பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர், மந்திரிகள் ஆர்.வி.தேஷ்பாண்டே, எச்.டி.ரேவண்ணா, கிருஷ்ண பைரேகவுடா, பண்டப்பா காசம்பூர், சிவசங்கரரெட்டி, ஜி.டி.தேவேகவுடா, சிவானந்தபட்டீல், வெங்கடரமணப்பா, பிரியங்க் கார்கே, சி.எஸ்.புட்டராஜூ, சா.ரா.மகேஷ், சங்கர், எம்.சி.மணகுலி, தலைமை செயலாளர் விஜயபாஸ்கர் மற்றும் மண்டல கமிஷனர்கள், பல்வேறு துறைகளின் முதன்மை செயலாளர்கள் மற்றும் மாவட்ட கலெக்டா்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டை தொடங்கி வைத்து குமாரசாமி பேசியதாவது:-

விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தை அமல்படுத்துவது அரசின் முக்கியமான பணி ஆகும். மாவட்டங்களில் விவசாயிகள் எந்தெந்த வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர் என்பது குறித்த விவரங்களை இன்று(நேற்று) கலெக்டர்கள் தாக்கல் செய்ய வேண்டும்.

மேலும் மாநில அரசின் இன்னொரு முக்கியமான திட்டம், தெருவோர வியாபாரிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கும் திட்டம் ஆகும். தகுதியான வியாபாரிகளுக்கு கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் கந்துவட்டி தொல்லையில் இருந்து தெருவோர வியாபாரிகளை காப்பாற்ற முடியும்.

கர்நாடகத்தில் சில மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டன. இதை நிர்வகிப்பதில் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் செயல்பட்டன. இது பாராட்டத்தக்கது ஆகும். தற்போது கர்நாடகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.

அடுத்த 4 மாதங்கள் வறட்சி பாதித்த பகுதிகளில் நிலைமை மிக மோசமாகும். இந்த சவாலை மாவட்ட நிர்வாகங்கள் சரியான முறையில் நிர்வகிக்க வேண்டும். நிவாரண பணிகளை மேற்கொள்ள மாவட்ட மந்திரிகள், மண்டல கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் இணைந்து செயல்பட வேண்டும்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.546 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்த நிதியை பயன்படுத்த ஒரு செயல் திட்டத்தை வகுக்க வேண்டும். வறட்சி நிவாரண பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும். நிவாரண பணிகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா? என்பதை அறிய கலெக்டர்கள் கிராம பஞ்சாயத்து அளவில் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த நிதி ஆண்டில் இன்னும் 3 மாதங்கள் மட்டுமே உள்ளது. இதில் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர் அதிகாரிகள் துறை வாரியாக வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்ய வேண்டும்.

இவ்வாறு குமாரசாமி பேசினார்.

குமாரசாமி பேசி முடித்த பிறகு, விவசாய கடன் தள்ளுபடிக்கு தகுதியான விவசாயிகளின் விவரங்களை மாவட்ட கலெக்டர்கள் முதல்-மந்திரியிடம் தாக்கல் செய்தனர். மேலும், வறட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் நிவாரண பணிகள் குறித்த விவரங்களையும் கலெக்டர்கள் வழங்கினர்.

மேலும், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் இதுவரை தொடங்கப்பட்டுள்ள திட்டங்கள், எவ்வளவு பணிகள் நடைபெற்றுள்ளது, இன்னும் எத்தனை திட்டங்கள் நிலுவையில் உள்ளது என்பது பற்றிய தகவல்களையும் கலெக்டர்கள் தெரிவித்தனர்.

Next Story