நகை பாலீஷ் போடுவதாக மோசடி: பீகார் வாலிபர் தாக்கப்பட்டு இறந்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது


நகை பாலீஷ் போடுவதாக மோசடி: பீகார் வாலிபர் தாக்கப்பட்டு இறந்த வழக்கில் 2 வாலிபர்கள் கைது
x
தினத்தந்தி 28 Nov 2018 4:51 AM IST (Updated: 28 Nov 2018 4:51 AM IST)
t-max-icont-min-icon

நகை பாலீஷ் போடுவதாக மோசடி செய்த பீகார் வாலிபரை கட்டி வைத்து தாக்கியதில் உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்து போனார். இந்த வழக்கில் 3 ஆண்டுக்கு பின்னர் போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள முதுனாள் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி விமலா (வயது 24). இவரின் வீட்டு வாசலுக்கு கடந்த 2015–ம் ஆண்டு 2 வடமாநில வாலிபர்கள் வந்தனர். இவர்கள் வெள்ளி, தங்க நகைகளுக்கு பாலீஷ் போட்டு கொடுப்பதாக தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய விமலா முதலில் வெள்ளி கொலுசுகளை கொடுத்துள்ளார். அதனை புத்தம்புதுசு போன்று மாற்றி கொடுத்ததும் விமலா 3 பவுன் நகைகளை கொடுத்துள்ளார். அதனை பெற்றுக்கொண்ட வாலிபர்கள் தாங்கள் வைத்திருந்த பவுடர் கலந்த தண்ணீரில் மூழ்கி எடுத்து புதியது போல் மாற்றி கொடுத்தனர்.

இந்த சங்கிலியை வாங்கி பார்த்த விமலா அதிர்ச்சி அடைந்தார். அந்த சங்கிலியின் எடை குறைந்திருந்ததோடு, அதன் பல பகுதிகளில் சோதாரம் அடைந்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் ஊர்மக்கள் திரண்டனர். இதனால் சுதாரித்து கொண்ட ஒரு வாலிபர் மட்டும் அங்கிருந்து நைசாக தப்பி சென்று விட்டார். மற்றொரு வாலிபர் மட்டும் சிக்கி கொண்டதால் அவரை கட்டிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது.

பின்னர் ராமநாதபுரம் பஜார் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட வாலிபருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவரை உடனடியாக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி வாலிபர் பரிதாபமாக இறந்தார். போலீசாரின் விசாரணையில் இருக்கும்போது வாலிபர் இறந்ததால் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. நீதிபதி பழனியம்மாள் விசாரணை மேற்கொண்டார். இதுதவிர, ராமநாதபுரம் குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை மேற்கொண்டு வந்தார்.

இந்த விசாரணையின்போது இறந்த வாலிபர் பீகார் மாநிலம் சுபாவுல் மாவட்டம் குலாஸ் கிராமத்தை சேர்ந்த தில்கோஷ் குமார்(19) என்பது தெரியவந்தது. கடந்த 3 ஆண்டாக நடைபெற்று வந்த இந்த விசாரணையின் முடிவில் வாலிபர் தில்கோஷ்குமாரை கட்டிவைத்து தாக்கியதாக முதுனாள் கிராமத்தை சேர்ந்த பாலாஜி(வயது 35), மாயகிருஷ்ணன்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் முத்துக்குமார்(29) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் கைதானர்களின் உறவினர்கள் கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் தாக்கியதால் தில்கோஷ் குமார் இறந்த நிலையில் அதனை மறைத்து வழக்கினை முடிப்பதற்காக போலீசார் பொய் வழக்குபதிவு செய்து 2 வாலிபர்களை கைது செய்துள்ளதாக கூறி கோ‌ஷமிட்டனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் தலைமையிலான போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து விசாரணை அதிகாரி மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரவீந்திர பிரகாஷ் கூறியதாவது:–

தங்கத்தின் எடை குறைந்ததால் கம்பத்தில் கட்டிவைத்து தாக்கி உள்ளனர். இதனால் மயக்க நிலையும், வலிப்பும் ஏற்பட்டு ஒருகட்டத்தில் இறந்துவிட்டார். உடலில் எந்த காயமும் இல்லை. இந்த வழக்கு தொடர்பாக 40–க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் விசாரணை செய்து 10 பேரிடம் ஒப்புதல் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னரே சம்பந்தப்பட்ட வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story