பள்ளி மாணவ–மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்


பள்ளி மாணவ–மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Nov 2018 3:45 AM IST (Updated: 28 Nov 2018 5:01 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவ–மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

நெல்லை, 

பாளையங்கோட்டையில் பள்ளி மாணவ–மாணவிகளின் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

விழிப்புணர்வு பேரணி

பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கப்படுவதற்கும், சேமித்து வைப்பதற்கும், வினியோகம் செய்வதற்கும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நெல்லை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று காலை நடந்தது. இந்த பேரணி பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இருந்து தொடங்கியது. மாவட்ட கலெக்டர் ஷில்பா கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார்.

பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக...

அப்போது அவர் பேசுகையில், “பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக மாற்ற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாடுகளால் ஏற்படும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த பேரணி நடத்தப்பட்டு வருகிறது“ என்றார்.

பேரணியில் நெல்லை டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி, முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி, ரகுமானியா மேல்நிலைப்பள்ளி, முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி, மேரி சார்ஜென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி, கதீட்ரல் மேல்நிலைப்பள்ளி, தூய யோவான் மேல்நிலைப்பள்ளி, கிறிஸ்துராஜா மேல்நிலைப்பள்ளி, தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி, குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாராள் தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த நாட்டு நலப்பணி திட்ட மாணவ–மாணவிகள் கலந்து கொண்டனர். பேரணி தபால் நிலையம் வழியாக தூய சவேரியார் மேல்நிலைப்பள்ளி அருகே நிறைவடைந்தது.

பேரணியில் மாவட்ட சுற்றுச்சூழல் என்ஜினீயர் ரொமால்ட் டெரிக் பிண்டோ, உதவி என்ஜினீயர் செந்தில்குமார், நெல்லை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலா, மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் தேவபிச்சை, ஆறுமுகசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story