குப்பம் அருகே கல்லூரி மாணவி காதலனுடன் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை
குப்பம் அருகே கல்லூரி மாணவி, தனது காதலனுடன் ரெயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பதி,
தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவர் மோனிஷா (வயது 21). இவர், வேலூர் மாவட்டம் ஆற்காட்டில் உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்சி 3–ம் ஆண்டு படித்து வந்தார். இவரும், அதேபகுதியைச் சேர்ந்த ஹேமந்த்குமார் (23) என்பவரும் 3 ஆண்டுகளாக காதலித்தனர்.
அவர்களின் காதல் விவகாரம் இருவருடைய பெற்றோருக்கும் தெரிய வந்தது. காதலுக்கு இரு வீட்டாரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். மோனிஷாவை, அவரின் பெற்றோர் கல்லூரிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.
இந்தநிலையில் ஹோமந்த்குமாரும், மோனிஷாவும் வீட்டை விட்டு வெளியேறி நேற்று காலை ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்த இருவரும், குப்பம் நிலையில் நிலையத்தை அடுத்து, சற்று தூரத்தில் தண்டவாளம் அருகே நின்றிருந்தனர். அப்போது அந்த வழியாக ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். அதில் காதல் ஜோடியின் உடல்கள் துண்டு துண்டாகின.
இதுபற்றி தகவல் அறிந்ததும், குப்பம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காதல் ஜோடியின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட இடத்தில் பைகள் கிடந்தன. அதில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர்.
அந்தக் கடிதத்தில் இருவரும், நாங்கள் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். ஆனால் எங்களின் பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் வாழ பிடிக்காமல் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை என எழுதப்பட்டு இருந்தது. இதுபற்றி குப்பம் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.