இன்று முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்


இன்று முதல் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்படும் பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:00 PM GMT (Updated: 28 Nov 2018 2:42 PM GMT)

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இன்று (வியாழக்கிழமை) முதல் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி–சென்னை எழும்பூர், சென்னை எழும்பூர்– கன்னியாகுமரிக்கு தினமும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து கன்னியாகுமரிக்கு தினமும் காலை 6.30 மணிக்கு வந்து சேர்ந்ததும், நாகர்கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு நாகர்கோவில்– கொச்சுவேளி பாசஞ்சர் ரெயிலாக இயக்கப்பட்டு வருகிறது.

கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக இயக்க தொடங்கிய நாள் முதல் இந்த ரெயில் தினமும் சென்னைக்கு காலதாமதமாக புறப்பட்டு செல்கிறது. இதனால் பயணிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகி வந்தனர். மேலும் இதற்கு பயணிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து நாகர்கோவில்–கொச்சுவேளி பாசஞ்சர் ரெயில் 28–ந் தேதி (அதாவது நேற்று) முதல் இயக்கப்படாது என்றும், கன்னியாகுமரி– சென்னை, சென்னை–கன்னியாகுமரிக்கு தனி எக்ஸ்பிரஸ் ரெயிலாக சரியான நேரத்துக்கு இயக்கப்படும் என்றும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் நேற்றும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில்–கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக மீண்டும் இயக்கப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இன்று முதல் இயக்கப்படாது


இதுதொடர்பாக மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்து துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை, கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயிலாக இயக்குவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த ரெயில் இன்று (அதாவது நேற்று) முதல் தனி ரெயிலாக இயக்கப்படும் என்ற உத்தரவு அதிகாரிகளால் உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து எனது கவனத்துக்கு வந்தது.

உடனே நான் இதுகுறித்து ரெயில்வே உயர் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினேன். அவர்கள் நாளை (அதாவது இன்று) முதல் கொச்சுவேளிக்கு பாசஞ்சர் ரெயில் ரத்து செய்யப்படும், மீண்டும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்படும் என்று உறுதியாக கூறியுள்ளனர். இதை மத்திய ரெயில்வே மந்திரி கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய அளவுக்கான பிரச்சினை இல்லை. அதனால் ரெயில்வே துறை உயர் அதிகாரிகளிடம் பேசியிருக்கிறேன். நாளை (இன்று) முதல் கொச்சுவேளிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இயக்கப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story