கூலியம் ஏரியில் மீன் குத்தகை ஏலம் விட விவசாயிகள் எதிர்ப்பு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு
கூலியம் ஏரியில் மீன் குத்தகை ஏலம் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி ஒன்றியம் கூலியம் ஏரி மீன் குத்தகை ஏலம், கிருஷ்ணகிரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இது குறித்து தகவல் அறிந்த செம்படமுத்தூர், கும்மனூர், குட்டகொல்லை, எஸ்.மோட்டூர், மெட்டுப்பாறை, தோனிகுட்டை பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட ஆண், பெண் விவசாயிகள் நேற்று, வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்தனர். கூட்டம் அதிக அளவில் வந்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
கிருஷ்ணகிரி ஒன்றியத்திற்குட்பட்ட கூலியம் ஏரிக்கு தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த ஏரியில் இருந்து வரும் தண்ணீரால் ஏரியின் கீழ் பகுதியில் உள்ள 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகிறது. இந்த ஏரி தண்ணீரை நம்பி தான் நெல், வாழை, ராகி, தக்காளி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்கிறோம்.
இந்நிலையில் கூலியம ஏரியில் மீன் வளர்ப்பதற்கு குத்தகை விடுவதாக தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த நாங்கள் இங்கு வந்தோம். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் முறையிட்டோம். அவர், தற்போது தற்காலிகமாக ஏலம் விடுவதை நிறுத்தி வைத்துள்ளதாக கூறினார். இந்த ஏரியை நம்பி தான் நாங்கள் சுமார் 95 சதவீதம் பேர் விவசாயம் செய்து வருகிறோம்.
ஏரியை ஏலம் எடுப்பவர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தண்ணீரை நிறுத்தி வைத்துவிடுவார்கள். இதனால் இந்த ஏரியை நம்பி பயிர் செய்யும் நாங்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவோம்.
ஏற்கனவே 42 ஏக்கர் பரப்பளவில் இருந்த கூலியம் ஏரி, தற்போது பல்வேறு ஆக்கிரமிப்பால் 22 ஏக்கராக சுருங்கிவிட்டது. மேலும் ஏரியை தூர்வாரி பல ஆண்டுகள் ஆவதால், ஏரியின் ஆழமும் குறைந்து, தண்ணீர் தேக்கி வைக்கப்படும் அளவும் குறைந்து விட்டது. இந்த நிலையில் ஏரியை மீன் குத்தகைக்கு விடப்பட்டால், வந்து கொண்டிருக்கும் தண்ணீரும் நின்றுவிடும். பின்னர் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த ஏரி தண்ணீருக்காக கடந்த 25 ஆண்டுகளாக போராடி வருகிறோம். கூலியம் பஞ்சாயத்தில் ஏரி உள்ளதால் செம்படமுத்தூர் பஞ்சாயத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் விட முடியாது என்று பலமுறை கால்வாயை அடைத்துள்ளனர். இந்த பிரச்சினை நிலுவையில் உள்ள நிலையில் தற்போது ஏரியை மீன் குத்தகை ஏலம் விடுவதாக அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகிறோம். எனவே, கூலியம் ஏரியில் மீன் வளர்க்க தடை விதித்து, விவசாயத்திற்கு தண்ணீர் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
ஒரே நேரத்தில் 6 கிராம விவசாயிகள் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story