பர்கூர் அருகே நடுரோட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து டீசல் கொட்டியது பொதுமக்கள் கேன்களில் பிடித்து சென்றனர்


பர்கூர் அருகே நடுரோட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து டீசல் கொட்டியது பொதுமக்கள் கேன்களில் பிடித்து சென்றனர்
x
தினத்தந்தி 29 Nov 2018 4:45 AM IST (Updated: 28 Nov 2018 10:42 PM IST)
t-max-icont-min-icon

பர்கூர் அருகே நடுரோட்டில் டீசல் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. டேங்கரில் இருந்து கொட்டிய டீசலை பொதுமக்கள் கேன்களில் போட்டி போட்டு பிடித்து சென்றனர்.

பர்கூர்,

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 27), சந்துரு (35). இவர்கள் சென்னை தண்டையார்பேட்டையில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருந்து 20 ஆயிரம் லிட்டர் டீசலை டேங்கர் லாரியில் ஏற்றிக் கொண்டு பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

அந்த லாரியை மூர்த்தி ஓட்டிச் சென்றார். கிளனராக சுந்தர்ராஜ் (30) இருந்தார். அந்த லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே உள்ள பி.ஆர்.ஜி.மாதேப்பள்ளி பக்கமாக நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த மூர்த்தி, சுந்தர்ராஜ் ஆகிய 2 பேரும் லேசான காயம் அடைந்தனர்.

லாரி கவிழ்ந்ததால் டீசல் நடுரோட்டில் கொட்டியது. இது குறித்து தகவல் அறிந்ததும் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். டேங்கர் லாரியில் இருந்து டீசல் கொட்டியதை பார்த்ததும் ஆச்சரியம் அடைந்தனர். பின்னர் வீட்டுக்கு ஓடிச்சென்று குடம், கேன்களை எடுத்து வந்து போட்டி போட்டுக் கொண்டு டீசலை பிடித்து சென்றனர். இதன் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்றனர். விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். லாரியில் இருந்த 20 ஆயிரம் லிட்டர் டீசலில், பாதிக்கும் மேல் கொட்டியதால் சாலை முழுவதும் டீசலாக காணப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story