கஜா புயலால் பாதிக்கப்பட்ட 970 கிராமங்களில் இயல்புநிலை திரும்புவது எப்போது? மின்சாரம் இல்லாமல் தவிப்பு


கஜா புயலால் பாதிக்கப்பட்ட 970 கிராமங்களில் இயல்புநிலை திரும்புவது எப்போது? மின்சாரம் இல்லாமல் தவிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 970 கிராமங்களில் இயல்பு நிலை திரும்புவது எப்போது? என மக்கள் தவித்து வருகிறார்கள். இன்னும் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்படுகிறார்கள். பல கிராமங்களில் ஜெனரேட்டர் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தஞ்சாவூர்,

வங்கக்கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவானது. கஜா என பெயரிடப்பட்ட இந்த புயல் நாகை மாவட்டம் வேதாரண்யத்துக்கும், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்துக்கும் இடையே கரையை கடந்தது. அப்போது சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

இதன் காரணமாக தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. தஞ்சை மாவட்டத்தில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை தொடங்கி கடைகோடி பகுதியான அதிராம்பட்டினம், பேராவூரணிவரை கடுமையாக பாதிக்கப்பட்டது.

மேலும் இந்த பகுதிகளின் அருகே உள்ள கிராமங்களில் தான் பெரும் சேதம் ஏற்பட்டது. கிராமங்களில் உள்ள குடிசை வீடுகள், ஓட்டு வீடுகள் முற்றிலும் சேதம் அடைந்தன. மாடி வீடுகளும் சேதம் அடைந்தன. மேலும் அனைத்து மரங்களும் சாய்ந்து விழுந்தன.

லட்சக்கணக்கான தென்னை மரங்கள், மா மரங்கள், பலா மரங்கள், வாழை உள்ளிட்ட மரங்களும் கடுமையாக சேதம் அடைந்தன. இந்த புயலினால் பாதிக்கப்பட்ட தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் இன்னும் முகாம்களில் தான் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.


தஞ்சை மாவட்டத்தில் 970-க்கும் மேற்பட்ட கிராமங்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற கிராமங்களிலும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த 970 கிராமங்களில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதில் இருந்து மீளவில்லை. புயல் பாதிப்பினால் தங்களின் உடைமைகளை இழந்து அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகிறார்கள்.

இன்னும் ஒருசில கிராமங்களை தவிர பல கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்படவில்லை. மின்கம்பங்கள் சீரமைக்கும் பணிகள் துரித கதியில் நடைபெற்று வருகின்றன. தற்போது கிராமப்பகுதிகளுக்கு மின்சப்ளை செய்யும் பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த கிராமங்களில் சாய்ந்து விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன. தற்போது கிராமங்களுக்கு செல்லும் சாலைகளில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்டு, சாலைகளில் பொதுமக்கள் செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மற்ற மரங்களை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் 250-க்கும் மேற்பட்ட பொக்லின் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கிராமப்பகுதிகளில் உள்ள பள்ளிகளை சுற்றி விழுந்த மரங்களும் தற்போது வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமப்பகுதிகளில் மின்வினியோகம் இல்லாததால் குடிநீர் தங்கு தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக 300 ஜெனரேட்டர்கள் கொண்டு குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு ஏற்றப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர லாரிகள் மூலமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும் தொற்றுநோய் பரவாமல் தடுக்க பிளச்சிங்பவுடர், பினாயில் தெளிக்கப்பட்டு வருகிறது. சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகளும் தொடங்கி நடைபெற்று வருகின்றன. சுனாமியை போல பலமடங்கு பேரழிவுகளை மக்கள் சந்தித்துள்ளனர். பொதுமக்கள் வீடுகள், உடைமைகளை இழந்ததோடு, தென்னை, வாழை போன்ற மரங்களையும் இழந்துள்ளனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளன.

பல கிராமங்களில் நிவாரண உதவி இன்றியும் மக்கள் தவித்து வருகிறார்கள். இதில் இருந்து மீண்டு தங்கள் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு இன்னும் சில நாட்கள் ஆகும். இருப்பினும் தமிழக அரசு உரிய அடிப்படை வசதிகளை விரைந்து மேற்கொண்டு மக்கள் இயல்புநிலைக்கு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.

Next Story