வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.5-க்கு விற்பனை


வெளிமாநிலங்களில் இருந்து வரத்து அதிகரிப்பு: பெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி - கிலோ ரூ.5-க்கு விற்பனை
x
தினத்தந்தி 29 Nov 2018 3:30 AM IST (Updated: 29 Nov 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

வெளி மாநிலங்களில் இருந்து வரத்து அதிகரித்து உள்ளதால் கோவையில் பெரிய வெங்காயம் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது. கிலோ ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கோவை,


மராட்டிய மாநிலம் புனே, கர்நாடக மாநிலம் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் தற்போது பெரிய வெங்காயம் அதிகளவு அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் கோவை மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயத்தின் வரத்து அதிகரித்து உள்ளது. ஒரு நாளைக்கு 400 டன் முதல் 450 டன் வரை வரத்து இருக்கிறது. வழக்கமாக 200 முதல் 250 டன் பெரிய வெங்காயம் வரும். வரத்து அதிகரித்து உள்ளதால் பெரிய வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்து உள்ளது.

மொத்த விலையில் ரூ.10-க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் (2-ம் ரகம்) ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரூ.20-க்கு விற்ற முதல் ரகம் ரூ.15-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் தக்காளி உள்பட பல்வேறு காய்கறிகளின் வரத்தும் அதிகரித்து உள்ளதால் விலையும் கணிசமாக குறைந்து உள்ளது.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் ரோடு எம்.ஜி.ஆர். காய்கறி மார்க்கெட் மொத்த வியாபாரி ஒருவர் கூறிய தாவது:-

கோவையில் தென்மேற்கு பருவமழை கைகொடுத்ததால் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்தனர். தற்போது அவை நல்ல மகசூலை தந்து உள்ளது. இதனால் கோவையில் உள்ள மார்க்கெட்டுகளுக்கு காய்கறிகளின் வரத்து அதிகரித்து உள்ளது.

இதன்காரணமாக அதன் விலை குறைந்து உள்ளது. கடந்த மாதம் மொத்த வியாபாரத்தில் கிலோ ரூ.50-க்கு விற்பனையான பீன்ஸ் மற்றும் கேரட் தற்போது ரூ.30-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.45-க்கு விற்பனையான சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கும், ரூ.15-க்கு விற்பனையான நாட்டு தக்காளி மற்றும் ஆப்பிள் தக்காளி கிலோ ரூ.10-க்கும், ரூ.30-க்கு விற்பனையான வெண்டைக்காய் ரூ.20-க்கும் விற்பனை செய்யப்பட்டன. இதில் சில்லறை விலையில் 5 முதல் 10 சதவீதம் வரை விலை உயர்ந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக பெரிய வெங்காயம் உள்ளது. அதன் விலை குறைந்து உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.

Next Story