ஈரோட்டில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்கள் கைது
ஈரோட்டில் திருட்டு, வழிப்பறியில் ஈடுபட்ட 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
ஈரோடு ரங்கம்பாளையம் சீனிவாசராவ்வீதியை சேர்ந்தவர் அமாவாசை. இவருடைய மகன் நாகராஜ் (வயது 28). இவர் ஈரோடு காசிபாளையம் சென்னிமலை ரோடு பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடந்து சென்றுகொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் நாகராஜிடம் இருந்து செல்போனை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து நாகராஜ் ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தாலுகா போலீசார் சென்னிமலை ரோட்டில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர் ஈரோடு சூரம்பட்டியை சேர்ந்த ராமசந்திரனின் மகன் பிரேம்குமார் (21) என்பதும், அவர்தான் நாகராஜிடம் செல்போனை பறித்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பிரேம்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில், பிரேம்குமாரின் நண்பர்களான ஈரோடு பெரியார்நகரை சேர்ந்த சாமிநாதனின் மகன் ஜெகதீஸ் (23), ஈரோடு ஆலமரத்து வீதியை சேர்ந்த ரகுபதியின் மகன் வினோத்குமார் என்கிற பெருக்கான் (21) ஆகியோரும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
இதில் ஜெகதீஸ், ஈரோடு வி.வி.சி.ஆர்.நகரை சேர்ந்த மணிமாறனின் மகன் சுரேந்திரிடம் (20) செல்போனை பறித்துவிட்டு சென்றதும், வினோத்குமார் ஈரோடு ரெயில்வே காலனியில் உள்ள ரெயில்வே சீனியர் செகன்டரி பள்ளிக்கூடத்தில் பூட்டை உடைத்து திருட்டு முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரேம்குமார் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஜெகதீஸ், வினோத்குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான பிரேம்குமார், ஜெகதீஸ், வினோத்குமார் ஆகிய 3 பேரையும் போலீசார் நேற்று ஈரோடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.