மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - சரத்குமார் பேட்டி


மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் - சரத்குமார் பேட்டி
x
தினத்தந்தி 28 Nov 2018 11:30 PM GMT (Updated: 28 Nov 2018 10:52 PM GMT)

மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகத்திற்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறினார்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்ட சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் சமத்துவ மக்கள் கட்சி தனித்துப் போட்டி என்ற நோக்கில் தற்போது பயணம் செய்து கொண்டிருக்கிறது. சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக கவர்னரிடம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அழுத்தமாக வலியுறுத்தினால் அவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது எனது கருத்து.

கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டினால் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாழ்வாதார போராட்டம் நடத்தி கொண்டிருக்கும் விவசாயிகள் மேலும் பாதிக்கப்படுவார்கள். எனவே தமிழக அரசு, மத்திய அரசுடன் பேசி இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது கண்டனத்துக்குரியது.இந்த அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும்.

கஜா புயல் விவகாரத்தில் கேரளாவில் வெள்ளம் பாதித்தபோது அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்பியவாறு தமிழகத்திலும் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து குரல் எழுப்ப வேண்டும். தமிழக அரசின் நிவாரண பணிகளை குறை சொல்லக் கூடிய காலமல்ல. அனைவரும் நிவாரண பணிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய தருணம் இது.

கஜா புயல் குறித்து உடனுக்குடன் தகவல்களை தெரிவித்து உயிர் சேதத்தை குறைத்த தமிழக அரசை பாராட்டுகிறேன். அதேபோல் நேரம் காலம் பார்க்காமல் உழைக்கும் மின்வாரிய ஊழியர்களையும் பாராட்ட வேண்டும்.

கஜா புயல் பாதிப்பு பகுதிகளை பேரிடர் பாதித்த பகுதிகளாக அறிவித்து மத்திய அரசு உடனடியாக ராணுவத்தை அனுப்பி நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இன்னும் பல்வேறு பகுதிகளுக்கு முழுமையான நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை என்ற குற்றச்சாட்டு எழுகிறது.

தமிழக அரசு நிவாரண பொருட்களை அனுப்புவதில் துரிதமாக செயல்படுவது அவசியம். பிரதமர் மோடி கஜா புயல் பாதித்த பகுதிகளை நேரில் பார்வையிட வர வேண்டும்.

சாதி கொலைகள், ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் கண்டிப்பாக இயற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story