புனேயில் பயங்கர தீ விபத்து : 100 குடிசை வீடுகள் எரிந்து நாசம்


புனேயில் பயங்கர தீ விபத்து : 100 குடிசை வீடுகள் எரிந்து நாசம்
x
தினத்தந்தி 28 Nov 2018 11:06 PM GMT (Updated: 28 Nov 2018 11:06 PM GMT)

புனேயில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 100 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. தீ விபத்தில் படுகாயம் அடைந்த 3 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

புனே,

புனே சிவாஜிநகர் அருகே பாட்டீல் எஸ்டேட் குடிசை பகுதி உள்ளது. இங்கு சுமார் 400 குடிசை வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், நேற்று காலை 11 மணி அளவில் இங்குள்ள குடிசை வீட்டில் திடீரென தீப்பிடித்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடிசைவாசிகள் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.

ஆனால் தீ வேகமாக எரிந்ததுடன் அருகில் உள்ள மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதனால் குடிசைவாசிகள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

வீடுகள் கொழுந்து விட்டு எரிந்தன. இதனால் அந்த பகுதியே புகை மண்டலமாக மாறியது. வீடுகளில் இருந்த கியாஸ் சிலிண்டர்களும் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.

தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு துறையினர் வாகனங்களில் விரைந்து வந்தனர். வாகனம் செல்ல முடியாத பகுதி என்பதால் அங்குள்ள மேம்பாலத்திலேயே தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து தீயணைப்பு படையினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள்.

ஆனால் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது. இதையடுத்து, அங்கு கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தண்ணீர் டேங்கர்கள் வரவழைக்கப்பட்டன. மொத்தம் 35 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். 50-க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர்கள் சம்பவ இடத்திற்கு வந்திருந்தன. சுமார் 4 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வந்து அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் அங்கிருந்த சுமார் 100 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சாம்பலானது.

தீயில் சிக்கி 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். தீ விபத்தில் வீடுகளை இழந்த பொதுமக்கள் கதறி அழுதபடி இருந்தனர். அவர்கள் தற்காலிகமாக அங்குள்ள தேவாலயம், கலையரங்கம் உள்ளிட்டவற்றில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில், தீ விபத்து ஏற்பட்ட பாட்டீல் எஸ்டேட் குடிசை பகுதியை மேயர் முக்தா திலக் நேரில் வந்து பார்வையிட்டார். வீடுகளை இழந்த மக்களுக்கு தேவையான உதவிகள் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story