கொட்டிவாக்கத்தில் வாலிபர் கொலை வழக்கில் 5 பேர் கைது
கொட்டிவாக்கத்தில், வாலிபர் கொலை வழக்கில் அவருடைய நண்பர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆலந்தூர்,
சென்னையை அடுத்த கொட்டிவாக்கம் காலனியை சேர்ந்தவர் பாலாஜி(வயது 29). இவர், நேற்று முன்தினம் இரவு கொட்டிவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், திடீரென பாலாஜியை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதில் படுகாயம் அடைந்த பாலாஜியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், பாலாஜி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
கொலையில் துப்பு துலக்க நீலாங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈஞ்சம்பாக்கத்தில் விஷஊசி போட்டு 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான ரியல் எஸ்டேட் அதிபருக்கு உதவியாக இருந்ததாக பாலாஜியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த பாலாஜி, திருந்தி வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. மேலும் பாலாஜியின் நண்பர்களும் வீடுகளில் இல்லாமல் தலைமறைவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை தேடினார்கள்.
பாலாஜியின் நண்பர்கள் 5 பேர் பட்டினப்பாக்கம் கடல் முகத்துவாரம் பகுதியில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் அங்கு விரைந்துசென்ற போலீசார், 5 பேரையும் பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த பசூல்(30), ஐவின்(26), ராஜா(26), கார்த்திக்(33), சஞ்சய் (22) என தெரியவந்தது.
சமீபத்தில் வேறு ஒரு வழக்கில் பசூல் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். பாலாஜிதான் போலீசாருக்கு தகவல் கொடுத்து இருக்கவேண்டும் என்று பசூல் மற்றும் அவரது நண்பர்கள் கருதினர். மேலும் பசூலுக்கும், பாலாஜிக்கும் இடையே ஏற்கனவே தகராறு இருந்ததும் தெரிந்தது.
இதனால் பாலாஜியை இவர்கள் 5 பேரும் சேர்ந்து வெட்டிக்கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது. பசூல் உள்பட 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.