இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் : பிரணாப் முகர்ஜி பேச்சு


இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் : பிரணாப் முகர்ஜி பேச்சு
x
தினத்தந்தி 28 Nov 2018 11:27 PM GMT (Updated: 28 Nov 2018 11:27 PM GMT)

இந்தியாவின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள கிரீன்வுட் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டு இன்றைய கல்வியின் நிலை குறித்து பேசினார். மாணவர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளிக்கையில் கூறியதாவது:-

நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 லட்சம் கோடி அமெரிக்க டாலர்(ஒரு டாலர் மதிப்பு ரூ.70.62) மதிப்புடையதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த அளவுக்கு நமது பொருளாதாரம் வளர்ச்சி அடையவில்லை.

உலகில், பொருளாதாரத்தில் சக்தி வாய்ந்த நாடாக மாற இந்தியாவிடம் தேவையான வாய்ப்புகள், திறன்கள் உள்ளன. இந்தியாவின் பொருளாதாரம் தற்போது 2.27 லட்சம் கோடி அமெரிக்க டாலராக உள்ளது. இந்தியாவின் பொருளாதார பலத்தில் எனக்கு திருப்தி இல்லை. நான் முன்னாள் நிதி மந்திரியாக இருந்ததால் சொல் கிறேன், நமது நாட்டின் பொருளாதாரம் இன்னும் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும்.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு பேனாவை கூட உற்பத்தி செய்ய முடியாத நிலையில் இருந்தோம். ஆனால் கடந்த 71 ஆண்டுகளில் உலகின் பொருளாதார பலம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. உலகில் இந்தியா 3-வது பலமிக்க ராணுவத்தை கொண்டுள்ளது.

184 உறுப்பினர்களை கொண்ட ஐக்கிய நாடுகளில் இந்தியா மட்டுமே, முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்திற்கு வெற்றிகரமாக விண்கலத்தை அனுப்பியது. விமர்சனம் என்பது நமது வாழ்க்கையில் ஒரு அங்கம். விமர்சனம் எப்போதும் மோசமானதாக இருக்காது. அது எதிர்மறையாகவும் இருக்காது. நாட்டில் அனைவருக்கும் தரமான கல்வி கிடைக்க வேண்டும்.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.

Next Story