கர்நாடக அரசியலில் பரபரப்பு : மந்திரி டி.கே.சிவக்குமாருடன் எடியூரப்பா ‘திடீர்’ சந்திப்பு


கர்நாடக அரசியலில் பரபரப்பு : மந்திரி டி.கே.சிவக்குமாருடன் எடியூரப்பா ‘திடீர்’ சந்திப்பு
x
தினத்தந்தி 28 Nov 2018 11:29 PM GMT (Updated: 28 Nov 2018 11:29 PM GMT)

மந்திரி டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசியது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. இந்த கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டதில் நீர்ப்பாசனத்துறை மந்திரி டி.கே.சிவக்குமார் மிக முக்கிய பங்காற்றினார். கர்நாடக காங்கிரசில் அவர் முன்னணி தலைவராக திகழ்கிறார்.

சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பல்லாரி தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. அந்த தொகுதியின் ெபாறுப்பாளராக மந்திரி டி.கே.சிவக்குமார் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே டி.கே.சிவக்குமார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதில் கணக்கில் வராத ரொக்கம் கிடைத்தது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டி.கே.சிவக்குமார் கைது செய்யப்படலாம் என்று அவ்வப்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

டி.கே.சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்கும்படி வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறைக்கு எடியூரப்பா கடிதம் ஒன்றையும் எழுதி இருந்தார். இந்த தகவலை டி.கே.சிவக்குமார் பகிரங்கமாக வெளிப்படுத்தினார். இந்த விஷயத்தில் டி.கே.சிவக்குமார் மற்றும் எடியூரப்பா ஆகியோர் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.

இந்த நிலையில் மந்திரி டி.கே.சிவக்குமாரை பெங்களூரு சிவானந்த சர்க்கிளில் உள்ள அவரது வீட்டில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவரும், கர்நாடக பா.ஜனதா தலைவருமான எடியூரப்பா நேற்று திடீரென சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவரது மகன் ராகவேந்திரா எம்.பி., ஹாலப்பா எம்.எல்.ஏ. உள்பட பா.ஜனதா நிர்வாகிகள் சிலர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்புக்கு பிறகு மந்திரி டி.கே.சிவக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “சிவமொக்கா மாவட்டத்தில் சில நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவர் எதிர்க்கட்சி தலைவராக உள்ளார். இதில் நாங்கள் அரசியல் செய்யமாட்டோம். எடியூரப்பாவின் கோரிக்கை நிறைவேற்றப்படும் இந்த சந்திப்பில் விசேஷம் எதுவும் இல்லை” என்றார்.

எடியூரப்பா கூறும்போது, “சிவமொக்கா மாவட்டத்தில் நீர்ப்பாசன திட்டங்களை அமல்படுத்த கோரி மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் மனு கொடுத்தேன். அதை பெற்றுக்கொண்ட மந்திரி, அந்த திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். எங்களுக்கு மந்திரி சாதகமான பதிலை அளித்தார்” என்றார்.

சட்டசபை எதிர்க்கட்சி தலைவர், கர்நாடக பா.ஜனதா தலைவர், முன்னாள் முதல்-மந்திரியாக இருக்கும் எடியூரப்பா, மந்திரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த இந்த நிகழ்வை கர்நாடக அரசியல் விமர்சகர்கள் ஆச்சரியத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த சந்திப்பின் பின்னணியில் அரசியல் இருப்பதாகவும், பா.ஜனதாவில் வந்து சேரும்படி டி.கே.சிவக்குமாருக்கு எடியூரப்பா அழைப்பு விடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் டி.கே.சிவக்குமாரை எடியூரப்பா சந்தித்து பேசிய விவகாரத்தால் கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பேசிக்கொள்கிறார்கள்.

டி.கே.சிவக்குமார் நேற்று ஐதராபாத்துக்கு செல்ல திட்டமிட்டு இருந்தார். எடியூரப்பாவுக்காக அவர் தனது பயணத்தை ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story