நீதி விசாரணை நடத்தப்படும் - நாராயணசாமி உறுதி


நீதி விசாரணை நடத்தப்படும் - நாராயணசாமி உறுதி
x
தினத்தந்தி 29 Nov 2018 5:36 AM IST (Updated: 29 Nov 2018 5:36 AM IST)
t-max-icont-min-icon

தொழிலாளி மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

 மோட்டார் சைக்கிள் திருடியதாக கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட ஜெயமூர்த்தி மர்மமான முறையில் இறந்துள்ளார். போலீசார் தாக்கியதால்தான் அவர் இறந்து இருக்க வேண்டும். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகூறி அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றும் அவர்கள் புதுவை அரசு ஆஸ்பத்திரி அருகே மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில் அவர்களை தெற்கு மாநில தி.மு.க. அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏ., விடுதலை சிறுத்தைகளின் பொதுச்செயலாளரான முன்னாள் எம்.எல்.ஏ. ரவிக்குமார், முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் மற்றும் நிர்வாகிகள் சட்டசபைக்கு அழைத்து வந்தனர். அங்கு முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது போலீசார் தாக்கியதால்தான் ஜெயமூர்த்தி இறந்துவிட்டதாகவும், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள். ஜெயமூர்த்தியின் மனைவிக்கு அரசு வேலை வழங்கவேண்டும், அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கவேண்டும், மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்கள்.

அவர்களிடம் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுருநாதன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதியளித்தார். விசாரணையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதன்பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story