ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை ஓய்வுபெற்ற நீதிபதி அரிபரந்தாமன் பேட்டி
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.
தூத்துக்குடி,
ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்கு எதிரான வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை என்று ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.
இதுகுறித்து அவர் நேற்று காலை தூத்துக்குடியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
அதிகாரம் இல்லைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடருவது சரியல்ல. ஏனென்றால் பசுமை தீர்ப்பாயம் சட்டத்தின் கீழ் ஏற்படுத்தப்பட்ட அமைப்பு. அது விசாரிப்பதற்கு என்று சில வழக்குகள் உள்ளன. அரசு கொள்கை முடிவின்படி எடுக்கப்பட்ட முடிவை விசாரிக்க அதிகாரம் இல்லை.
அதேபோன்று தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கான உரிமத்தை நீட்டிக்க மறுக்கிறது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீட்டு அமைப்பிடம் முறையீடு செய்து, நிலுவையில் உள்ளது. அந்த உத்தரவை எதிர்த்து பசுமை தீர்ப்பாயம் செல்லக்கூடாது.
களங்கம் இல்லாத...தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த வழக்கில் ஸ்டெர்லைட் ஆலையால் ஏற்பட்ட மாசு குறித்து தகவல்களை சேகரிப்பதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்தது. ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் மீது ஏற்கனவே களங்கம் உள்ளது. இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் களங்கம் இல்லாத, மக்கள் நம்பிக்கை பெற்ற நீதிபதிகளை நியமித்து இருக்க வேண்டும்.
இந்த வழக்கில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கம், வணிகர் சங்கம், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் ஆகியோரும் உள்ளனர். அவர்களுக்கு, ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களின் நகல் வழங்க மறுக்கப்பட்டது. அதேபோன்று தருண்அகர்வால் குழு தாக்கல் செய்த அறிக்கையும் வழங்க மறுக்கப்பட்டது. அதே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது அவதூறு பரப்பப்படுகிறது. இது பொய்யான பிரசாரம். ஸ்டெர்லைட் மீது குற்றவியல் வழக்கு தொடரவும் நோட்டீசு கொடுத்து உள்ளனர். அதனால் இதுபோன்று பரப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது, பேராசிரியர் சரசுவதி, தூத்துக்குடி மத்திய வியாபாரிகள் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, வக்கீல் அதிசயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.