தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்: போலீஸ்–வருவாய்த்துறையினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது.
தூத்துக்குடி,
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது கலவரம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடத்திய தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், சிப்காட், புதுக்கோட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் மொத்தம் 249 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதில் துப்பாக்கி சூடு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகள் மட்டும் சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
சி.பி.ஐ. விசாரணைஇந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டு துப்பாக்கி சூடு வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி கடந்த ஆகஸ்டு மாதம் 14–ந் தேதி உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் திரட்டிய ஆவணங்களை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தனர்.
அதன்பேரில் கடந்த மாதம் 10–ந்தேதி சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள், துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டாரங்களை சேர்ந்த 20 அமைப்புகளின் மீது 15 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கு விசாரணை அதிகாரியாக துணை போலீஸ் சூப்பிரண்டு ரவி நியமிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து சி.பி.ஐ. அதிகாரிகள், துப்பாக்கி சூட்டில் இறந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பலத்த காயம் அடைந்தவர்களிடம் நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். சம்பவம் நடந்த பகுதிகளையும் பார்வையிட்டனர். அதன்பிறகு தூத்துக்குடியில் சி.பி.ஐ. முகாம் அலுவலகம் தொடங்கப்பட்டது. அங்கிருந்து விசாரணையை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.
போலீஸ் மீது வழக்குஇதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் அர்ச்சுனன், ஐகோர்ட்டு உத்தரவில் கூறப்பட்டு இருப்பது போன்று போலீஸ் மற்றும் வருவாய்த்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி சி.பி.ஐ. இணை இயக்குனரிடம் புகார் மனு கொடுத்தார். இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் சென்னை சி.பி.ஐ. அதிகாரிகள், இச்சம்பவம் தொடர்பாக போலீசார், வருவாய்த்துறையினர் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.