திருவண்ணாமலை மாவட்டத்தில் திருநங்கைகள் சுயதொழில் தொடங்க மானியம் உயர்வு கலெக்டர் தகவல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் திருநங்கைகள் சுயதொழில் தொடங்க மானியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் கந்தசாமி கூறி உள்ளார்.
திருவண்ணாமலை,
சமூகநலத் துறையின் மூலம் திருநங்கைகள் (மூன்றாம் பாலினத்தவர்கள்) சுயதொழில் தொடங்குவதற்காக வழங்கப்பட்ட மானியத் தொகை, 2018–2019–ம் நிதியாண்டு முதல் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக ஆக உயர்த்தி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விருப்பமுள்ள மூன்றாம் பாலினத்தவர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வருகிற 28–ந் தேதிக்குள் மாவட்ட சமூகநல அலுவலகத்தை அணுக வேண்டும்.
நிபந்தனைகள் விவரம் பின்வருமாறு:
தொழில் அனுபவம் குறித்த விவரம். மூன்றாம் பாலினத்தவருக்கான அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். செய்ய விரும்பும் தொழில் குறித்த பயிற்சி பெற்றிருப்பின், அதற்குரிய சான்று வேண்டும். தொழிலின் தேவைக்கேற்ப மானியம் ஒப்பளிப்பு செய்யப்படும். அதிகபட்சம் ரூ.50 ஆயிரம் வரை மானியத்தொகை வழங்கப்படும். சம்பந்தப்பட்ட தொழில் குறித்தான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் வரை தொழில் செய்ய கொள்முதல் செய்யப்பட்ட உபகரணங்கள் விற்கக்கூடாது. ஓராண்டு வரை தொழில் வளர்ச்சி மற்றும் முன்னேற்ற அறிக்கையினை மாவட்ட சமூகநல அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். முறையான பயனீட்டு சான்றிதழ் மாவட்ட சமூகநல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.