ஒகேனக்கல் அருகே பயங்கரம் த.மா.கா. பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை


ஒகேனக்கல் அருகே பயங்கரம் த.மா.கா. பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 29 Nov 2018 9:06 PM IST)
t-max-icont-min-icon

ஒகேனக்கல் அருகே தமிழ் மாநில காங்கிரஸ் பிரமுகர் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பென்னாகரம், 

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே ஊட்டமலை நாடார்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன் (வயது 52). தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாவட்ட மீனவர் அணி தலைவரான இவர் பால் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு கோவிந்தம்மாள் என்ற மனைவியும், ரமேஷ் என்ற மகனும் உள்ளனர்.

கணேசன் நேற்று அதிகாலை 5 மணியளவில் மொபட்டில் சென்று ஒகேனக்கல் பகுதியில் பால் வியாபாரத்தை முடித்துக்கொண்டு வீட்டுக்கு திரும்பினார். ஒகேனக்கல் முதலைப்பண்ணை அருகே இவர் சென்றபோது அங்கு மறைந்திருந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை அரிவாளால் வெட்ட வந்தனர்.

அதிர்ச்சி அடைந்த அவர் மோபட்டை கீழே போட்டு விட்டு அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் அவரை ஓட ஓட சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது. இதில் தலையில் பல இடங்களில் வெட்டுக்காயம் விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கணேசன் அந்த பகுதியில் மணல் கடத்தப்படுவது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர் முன்விரோதத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டாரா? அல்லது அவரது கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையில் சம்பவ இடத்துக்கு போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் அங்கும், இங்கும் சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. ஆலாம்பாடி பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று கிடந்தது. அதை கைப்பற்றிய போலீசார் அது கொலையாளிகள் பயன்படுத்தியதா? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story