சங்ககிரி அருகே 5 வயது மகளை இடுப்பில் கட்டியபடி கிணற்றில் குதித்து பெண் தற்கொலை கணவருடன் ஏற்பட்ட தகராறால் விபரீத முடிவு
சங்ககிரி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறால் மனம் உடைந்த பெண், தனது 5 வயது மகளை இடுப்பில் கட்டியபடி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதில் அவரது குழந்தையும் பரிதாபமாக இறந்தது.
சங்ககிரி,
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே மஞ்சக்கல் பட்டி கிராமம் கள்ளுக்கடை மேடு பகுதியில் வசித்து வருபவர் செல்வம் (வயது 36), விவசாயி. இவர் ஈரோடு மாவட்டம், பவானி சின்னபுலியூர் கிராமத்தை சேர்ந்த அன்புக்கரசியை(31) கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கன்ஷிகா என்று பெயரிட்டு அந்த குழந்தையை செல்லமாக வளர்த்து வந்தனர். கன்ஷிகா அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தாள். செல்வம்-அன்புக்கரசி தம்பதியினர் அதே பகுதியில் உள்ள மாந்தோப்பை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வந்தனர்.
சமீபத்தில் செல்வத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு ரூ.50 ஆயிரம் வரை செலவானதாக கூறப்படுகிறது. அதன்பிறகு உடல்நலம் பெற்று திரும்பிய அவர் மது அருந்தி வந்ததாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. கணவரின் இந்த செயலால் அன்புக்கரசி மனம் உடைந்து காணப்பட்டார்.
இந்தநிலையில் கடந்த 27-ந் தேதி அன்புக்கரசியும், அவருடைய 5 வயது குழந்தை கன்ஷிகாவும் திடீரென காணாமல் போனார்கள். மாயமான மனைவி மற்றும் குழந்தையை பல்வேறு இடங்களில் செல்வம் தேடி பார்த்தார். பின்னர் ஈரோடு மாவட்டம், பவானி சின்னபுலியூர் கிராமத்திற்கு சென்று மாமனார் குப்புசாமியிடம், அன்புக்கரசி குழந்தையுடன் வந்தாளா? என்று விசாரித்தார்.
நேற்று காலையில் செல்வத்தின் தோட்டத்து கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனே அங்கு சென்று பார்த்த பொதுமக்கள், அன்புக்கரசி பிணமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து சங்ககிரி போலீசாருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
இதையடுத்து தீயணைப்பு படையினர் கிணற்றில் இறங்கி அன்புக்கரசியின் உடலை மீட்பதற்காக திருப்பிய போது, அவர் இடுப்பில் கட்டப்பட்டிருந்த சேலையில் அவருடைய 5 வயது மகளும் கட்டப்பட்டு இறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் இருவரின் உடலையும் கிணற்றில் இருந்து மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அன்புக்கரசி மற்றும் அவரது குழந்தை ஆகியோரது உடல்களை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதனிடையே இந்த சம்பவம் குறித்து அன்புக்கரசியின் தந்தை குப்புசாமி சங்ககிரி போலீசில் புகார் அளித்துள்ளார். அதில் தனது மகள் மற்றும் பேத்தி சாவில் சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் மர்ம சாவு என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டதால் அன்புக்கரசி மனம் உடைந்து இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்றும், தனக்கு பிறகு தனது மகள் சரியாக வளர்க்கப்படுவாளா? என்ற பயத்தில் குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story