ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு


ராசிபுரம், புதுச்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைத்துறை திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2018 4:15 AM IST (Updated: 29 Nov 2018 11:23 PM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் பகுதிகளில் தோட்டக்கலைத்துறை சார்பில் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டப்பணிகளை கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல், 

புதுச்சத்திரம் மற்றும் ராசிபுரம் வட்டாரத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் தொடக்கமாக புதுச்சத்திரம் வட்டாரம் ராமநாயக்கன்பட்டி கிராமத்தில் விவசாயி ஜெயக்குமார் என்பவர் தனது நிலத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் குறைந்த விலையில் வெங்காயம் சேமிப்பு கிடங்கு அமைத்து இருப்பதை பார்வையிட்டார்.

பின்னர் ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது அங்கு மரக்கன்று நடவு செய்தார். இதையடுத்து ராசிபுரம் வட்டாரம் பட்டணம் கிராமத்தில் விவசாயி பன்னீர்செல்வம் என்பவரின் வயலில் அமைக்கப்பட்டிருந்த நிரந்தர திராட்சை பந்தல் அமைப்பினை அவர் பார்வையிட்டார்.

ராசிபுரம் வட்டாரத்தில் உள்ள முத்துக்காளிப்பட்டி கிராமத்தில் விவசாயி அத்தியப்பன் தனது வயலில் பிரதம மந்திரியின் சொட்டுநீர் பாசனம் திட்டத்தில் வெங்காய பயிரில் சொட்டுநீர் பாசனம் அமைத்து இருப்பதை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவரிடம் சொட்டுநீர் பாசன திட்டத்தினால் அடைந்த பலன்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலை துணை இயக்குனர் கண்ணன், தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் மஞ்சுளா, மணிமேகலை, தோட்டக்கலை அலுவலர்கள் யோகநாயகி, திவ்யா உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story