ஓராண்டுக்குள், உருக்காலை லாபத்தில் இயங்க நடவடிக்கை மத்திய மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் பேட்டி
ஓராண்டுக்குள் உருக்காலை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் கூறினார்.
சேலம்,
சேலம் உருக்காலையில் நேற்று இரும்பு மற்றும் எக்குத்துறை மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் ஆய்வு நடத்தினார். இதையடுத்து அங்கு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அவர் பங்கேற்றார். இதில் உருக்காலை நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதைத்தொடர்ந்து மத்திய மந்திரி சவுத்திரி பிரேந்தர் சிங் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் உருக்காலையில் இன்று(நேற்று) அனைத்து பகுதிகளுக்கும் சென்று 1½ மணி நேரத்துக்கும் மேலாக ஆய்வு செய்தேன். உருக்காலை லாபத்தில் இயங்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்காகவே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. உருக்காலை மூலம் கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2 ஆயிரம் கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த உருக்காலை உலகத்திலேயே மிக சிறந்த உயர்தரமான இரும்பு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமாகும். அப்படிப்பட்ட இந்த உருக்காலை நஷ்டத்தில் இயங்குவது சரியானது அல்ல.
உருக்காலையில் உற்பத்தி திறனை அதிகரிக்கவும், லாபத்தில் இயங்கவும் அதன் நிர்வாகத்தினர் மற்றும் தொழிலாளர்கள் சில யோசனைகள் தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள், இந்தாண்டே பெரிய அளவில் நஷ்டத்தை குறைக்க முடியும் என்றும், அடுத்த ஆண்டே லாபத்தில் இயக்க முடியும் என்றும் உறுதி அளித்துள்ளனர்.
உருக்காலைக்கு தமிழக அரசு மின்சாரத்தை அதிகமான விலைக்கு வினியோகம் செய்கிறது. இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட்டுக்கு அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உருக்காலையில் சூரிய சக்தி மூலம் 50 மெகா வாட் மின்சாரம் தயாரிக்க உள்ளோம். இதன் மூலம் 20 சதவீத நஷ்டத்தை குறைக்க முடியும். மேலும் மின்சாரத்தின் விலையை குறைக்க தமிழக அரசிடம் கேட்டு கொண்டுள்ளோம்.
புதிய முயற்சிகள் மூலம் 30 வகையான மதிப்பு கூட்டு பொருட்களை உற்பத்தி செய்ய உள்ளோம். உருக்காலையில் மொத்த உற்பத்தித்திறன் 3 லட்சத்து 64 ஆயிரம் டன் ஆகும். இதை அடைந்தாலே நஷ்டத்தை குறைக்கலாம். ஊழியர்கள் யாரும் கவலைப்பட வேண்டாம். இன்னும் 4 காலாண்டுக்குள்(ஓராண்டுக்குள்) உருக்காலை லாபத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிய காரணத்தினால் தான் உருக்காலையின் பங்குகளை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.
உருக்காலையை தனியார் மயமாக்க கூடாது என்று பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை சேலம் தொகுதி எம்.பி. பன்னீர்செல்வம் ஆகியோர் என்னை பலமுறை சந்தித்து வலியுறுத்தினர். உருக்காலையில் இருந்து மேற்கு வங்காளத்தில் உள்ள ரெயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலைக்கு உதிரிபாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
உருக்காலையின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக தமிழக அரசு 0.1 சதவீத வட்டியில் ரூ.215 கோடி கடன் வழங்க உள்ளதாக உறுதி அளித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது அருகில் செயில் தலைவர் அனில்குமார் சவுத்திரி, உருக்காலை செயல் இயக்குனர் கம்லாக்கர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
முன்னதாக உருக்காலையை ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி சவுத்திரி பிரிந்தர் சிங் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் விமான நிலையத்துக்கு நேற்று காலை வந்தார். அப்போது அவரை கலெக்டர் ரோகிணி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர் சவுத்திரி பிரேந்தர் சிங் நிருபர்களிடம் கூறும் போது, ‘உருக்காலையை தனியார் மயமாக்குவது குறித்து அதன் செயல்பாடுகளை பொறுத்து முடிவு எடுக்கப்படும். சேலம் மாவட்டத்தில் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பது குறித்து என்னால் எதுவும் கூற முடியாது’ என்றார்.
Related Tags :
Next Story