மகளின் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை எனது கணவரின் சொத்துகளை அபகரிக்க முயற்சி காடுவெட்டி குரு மனைவி பேட்டி


மகளின் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை எனது கணவரின் சொத்துகளை அபகரிக்க முயற்சி காடுவெட்டி குரு மனைவி பேட்டி
x
தினத்தந்தி 29 Nov 2018 11:00 PM GMT (Updated: 29 Nov 2018 7:01 PM GMT)

மகளின் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. எனது கணவரின் சொத்துகளை அபகரிக்க முயற்சி நடப்பதாக காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா தெரிவித்துள்ளார்.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஜெ.குரு என்கிற குருநாதன். மாநில வன்னியர் சங்க தலைவராக இருந்த இவர் கடந்த மே மாதம் 25-ந்தேதி உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். இவருடைய மகள் விருத்தாம்பிகை(வயது 20) சென்னையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இளங்கலை அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில் குருவின் உடன் பிறந்த 3-வது தங்கை சந்திரகலா மகன் மனோஜ்கிரணுக்கும்(27), விருத்தாம்பிகைக்கும் நேற்று முன்தினம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோவிலில் காதல் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில் குருவின் மனைவி சொர்ணலதா மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்துகொள்ளவில்லை. விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே உள்ள செட்டிசாவடி கிராமத்தில் தனது சகோதரர் கணேசன் வீட்டில் சொர்ணலதா இருந்துள்ளார். தனது மகளுக்கு ரகசிய திருமணம் நடைபெற்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் காடுவெட்டி கிராமத்தில் உள்ள தனது கணவர் குருவின் சமாதிக்கு சென்று மகளின் திருமணம், எனக்கு கூட தெரியாமல் நடந்து உள்ளது என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். நீங்கள் உயிரோடு இருந்திருந்தால் இந்த திருமணம் நடந்து இருக்காது என்றும், சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எனது மகளை திருமணம் செய்து உள்ளனர் என்றும் கூறி கதறி அழுதார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து சொர்ணலதா நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எனக்கு (சொர்ணலதா) எதிராக எனது மகன் மற்றும் மகளை எனது கணவரின் தங்கை குடும்பத்தினர் திருப்பிவிட்டுள்ளனர். எனது கணவரின் பெயரில் உள்ள சொத்துகளை அபகரிக்க வேண்டும் என்ற நோக்கில் விருப்பமில்லாத சூழ்நிலையில் எனக்கு தெரியாமல் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

ஆனால் முறைப்படி எனது கணவரின் சொத்துகள் அனைத்தும் எனது மகனுக்கு சொந்தம். அவனின் பெயரிலேயே சொத்துகள் இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம். சொத்துக்காக எனது குடும்பத்தை என்னை விட்டு பிரிக்கப்பார்க்கிறார்கள்.

உடல்நிலை சரியில்லாமல் எனது பெற்றோரின் வீட்டில் இருந்தபோது மருத்துவமனைக்கான அனைத்து செலவுகளையும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பார்த்துக் கொண்டனர். மேலும் எனக்கும், எங்கள் கிராமத்தில் உள்ள மக்களுக்கும் டாக்டர் ராமதாஸ் தான் ஆதரவாக இருந்து வருகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் நேற்று கும்பகோணம் கர்ணகொல்லை தெருவில் வசித்து வரும் குருவின் மற்றொரு சகோதரியான மீனாட்சியின் வீட்டில் குருவின் மகன் கனல் அரசன், மகள் விருத்தாம்பிகை, அவரது கணவர் மனோஜ்கிரண் ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர்.

குருவின் மகன் கனல் அரசன் கூறியதாவது:-

எனது தந்தையை கட்சிக்காக நன்றாக பயன்படுத்திக் கொண்டனர். வன்னியர் சங்கத்தையும், பா.ம.க. வையும் வளர்க்க எனது தந்தை கடுமையாக பாடுபட்டார். எனது தந்தை மருத்துவமனையில் இருந்தபோது யாரும் உதவி செய்ய வரவில்லை.

கட்சி தலைவர்(டாக்டர் ராமதாஸ்) மீது அப்பாவுக்கு நல்ல மரியாதை இருந்தது. ஆனால் மருத்துவமனையில் அப்பாவுக்கு அந்த மரியாதை இல்லாமல் போய்விட்டது. எனது தந்தை இறந்த பிறகு பா.ம.க தரப்பில் இருந்து யாரும் எங்களை கூப்பிட்டு கூட பேசவில்லை.

இந்த திருமணம் நடைபெறக்கூடாது என பா.ம.க.வினர் எங்களை தொடர்ந்து மிரட்டி வந்தனர். நாங்கள் அவர்களைப் பற்றி இப்போது புரிந்துகொண்டோம். எங்கள் அம்மா இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அதை புரிந்து கொண்டு விரைவில் எங்களோடு வருவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

குருவின் மகள் விருத்தாம்பிகை கூறுகையில் எனது தந்தையின் விருப்பப்படி தான் திருமணம் நடைபெற்றது. இந்த விஷயம் அம்மாவுக்கும் தெரியும் என்று தெரிவித்தார்

குருவின் மாப்பிள்ளை மனோஜ் கிரண் கூறியதாவது:-

நான் பிறந்தநாள் முதல் எனது மாமா குருவோடு தான் அதிகம் இருந்தேன். நான் தற்போது ஐ.ஏ.எஸ் படித்துக்கொண்டிருக்கிறேன். நானும் விருத்தாம்பிகையும் சின்ன வயதில் இருந்து விரும்பினோம். அதனால் திருமணம் செய்துகொண்டோம்.

திருமணம் செய்து கொண்டு ஊருக்கு செல்லலாம் என இருந்தோம். அப்போது ஊரில் உள்ளவர்கள் இங்கு வரக்கூடாது என எங்களை மிரட்டினர். இதுகுறித்து போலீசாரிடம் முறையிட்டுள்ளோம். பிரச்சினை குறைந்ததும் நாங்களே அங்கு அனுப்பிவைக்கிறோம் என கும்பகோணம் போலீசார் தெரிவித்தனர்.

எனது மாமாவுக்கு அப்பல்லோ மருத்துவமனையில் செலவான ரூ.32 லட்சம் செலவு தொகையை மட்டுமே பா.ம.க.வினர் ஏற்றுக்கொண்டனர். நாங்கள் ஆபரேஷன் செய்ய சொல்லியும் அவர்கள் எங்களை தடுத்து விட்டனர். ஆபரேஷன் செய்திருந்தால் எங்களது மாமாவை காப்பாற்றி இருக்கலாம்.

எனது மாமாவின் பெயரில் சுமார் ரூ.300 கோடி வன்னியர் சங்க அறக்கட்டளை சொத்துகள் உள்ளது. எனது மாமியார், மகன், மகள் ஆகியோர் கையெழுத்து போட்டால் தான் அதை மாற்ற முடியும்.எங்களது மாமாவின் விருப்பம் நானும், விருத்தாம்பிகையும் திருமணம் செய்ய வேண்டும் என்பதுதான். ஆனால் இந்த சொத்துக்காக பா.ம.க.வினர் விருத்தாம்பிகையை கடத்திச்சென்று வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டியதால் தான் நாங்கள் அவசரமாக திருமணம் செய்து கொள்ள வேண்டியதாயிற்று.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story