மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி நன்கொடை


மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்கள் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி நன்கொடை
x
தினத்தந்தி 30 Nov 2018 4:30 AM IST (Updated: 30 Nov 2018 12:33 AM IST)
t-max-icont-min-icon

மாணவர்கள் போட்டி தேர்வை எதிர்கொள்ளும் வகையில் சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களுக்கு சைதை துரைசாமி பொது அறிவு புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய மையம் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். போன்ற சிவில் சர்வீஸ் தேர்வு, மத்திய, மாநில அரசு பணிகளுக்கான பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதும் மாணவர்களுக்கு இலவச பயிற்சி அளித்து வருகிறது.

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் இருந்தே போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ள மாணவர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கு மிக முக்கிய தேவை பொது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்ற வகையில் சைதை துரைசாமி பெருநகர சென்னை மாநகராட்சியின் 70 பள்ளிக்கூடங்களில், ஒரு பள்ளிக்கூடத்துக்கு ரூ.10 ஆயிரம் பொது அறிவு நூல்கள் என்ற விகிதத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை நன்கொடையாக வழங்கினார்.

அந்த வகையில் ஒரு பள்ளிக்கூடத்துக்கு 42 பொது அறிவு புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புத்தகங்களை பள்ளிக்கூடங்களில் உள்ள நூலகங்களில் வைத்து, மாணவர்களை படிக்க செய்ய வேண்டும் என்று கூறி சைதை துரைசாமி ஆசிரியர்களிடம் வழங்கினார்.

இதற்கான விழா சென்னை நந்தனம் சி.ஐ.டி. நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சைதை துரைசாமி பேசியதாவது:-

நூலகங்களுக்கு வழங்கப்படும் புத்தகங்களை முதலில் ஆசிரியர்கள் நன்றாக படித்து, அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு மாணவர்களையும் படிக்க வைத்து திறனாய்வு செய்வது ஆசிரியர்களின் மிக முக்கிய பணியாக இருக்க வேண்டும்.

போட்டி தேர்வில் கலந்துகொள்ளும் எல்லா வெற்றியாளர்களும், நல்ல நூல்களையும், குறிப்பாக பொது அறிவு நூல்களை படித்து தான் தேறி இருக்கிறார்கள். அந்த வகையில் இந்த நூல்களை மாணவர்கள் படித்து பயன் பெற செய்வது ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கல்வி அதிகாரி கோவிந்தசாமி, கூடுதல் கல்வி அதிகாரி பாரதிதாசன், உதவி கல்வி அதிகாரி சாந்தி, பள்ளி தலைமை ஆசிரியர் அருள்செல்வி மற்றும் பிற பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story