பழனி அருகே, அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி - கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


பழனி அருகே, அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி - கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Nov 2018 3:30 AM IST (Updated: 30 Nov 2018 5:49 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே, அரசு பஸ்சின் சக்கரத்தில் சிக்கி, கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெய்க்காரப்பட்டி,

பழனியை அடுத்த சித்திரைக்குளம் ஊராட்சி போலம்மாவலசு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 20). கூலித்தொழிலாளி. இவருடைய நண்பர் பெத்தநாயக்கன்புதூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மோகன் (19). தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் பழனி நோக்கி வந்துகொண்டிருந்தனர். பழனி-உடுமலை ரோட்டில் சுக்கமநாயக்கன்பட்டி அருகே வந்த போது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஒரு வேனை முந்திச்செல்ல முயன்றனர்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தாறுமாறாக ஓடி முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. அப்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட இருவரும் அதே பஸ்சின் பின்பக்க சக்கரத்தில் சிக்கினர். இதில் படுகாயமடைந்த அவர்கள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விரைந்து சென்று பிணங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story