உறை பனி தாக்கம் எதிரொலி: மலர் நாற்றுகளை பாதுகாக்க ‘நைலான்’ வலை - நெருப்பு மூட்டி குளிர்காயும் மக்கள்
உறை பனி தாக்கம் எதிரொலியாக மலர் நாற்றுகளை பாதுகாக்க ‘நைலான்’ வலை கொண்டு மூடப்பட்டுள்ளது. நெருப்பு மூட்டி பொதுமக்கள் குளிர் காய்கின்றனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் குளிர்காலம் நிலவுகிறது. கடல் மட்டத்தில் இருந்து ஊட்டி பல மீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளதால் குளு, குளு காலநிலை காணப்படுகிறது. இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்களது நாடுகளில் நிலவும் குளிரை போன்று ஊட்டியிலும் நிலவுவதால் இங்கு வருகை தருகின்றனர். கடந்த ஆண்டு நீலகிரியில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை போதிய அளவு பெய்யவில்லை.
இதனால் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் உறை பனி கொட்ட தொடங்கியது. இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட அதிகளவில் பெய்து உள்ளது. ஆனால் வடகிழக்கு பருவமழை குறைந்தளவே பெய்தது. இதற்கிடையே ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான காந்தல், தலைகுந்தா போன்ற இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உறை பனி தாக்கம் தொடங்கியது. சுற்றுலா நகரமான ஊட்டியில் பகலில் வெயிலும், மாலை மற்றும் இரவில் கடுங்குளிரும் நிலவுகிறது.
நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா மலைசிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள் மாலையில் கடுங்குளிர் காரணமாக கம்பளி ஆடைகள் அணிந்திருந்தனர். ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் வியாபாரிகள், மூட்டை சுமக்கும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் குளிரை தணிக்க நெருப்பு மூட்டி குளிர் காய்கின்றனர். மேலும் வீடுகளின் அறைகளை ஹீட்டர் மூலம் பொதுமக்கள் வெப்ப மூட்டுகின்றனர். ஊட்டி அருகே தேயிலை பூங்காவில் தேயிலை செடிகள், மலர் செடிகள், அலங்கார செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பனியால் மலர் செடிகள், அலங்கார செடிகள் கருகும் அபாயம் ஏற்படும். இதற்கு முன்எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த செடிகள் மற்றும் அதன் நாற்றுகள் மீது குடில் போன்று சுற்றிலும் கம்பு வைக்கப்பட்டு ‘நைலான்’ வலை கொண்டு மூடப்பட்டு உள்ளது. புல்வெளிகள் கருகாமல் இருக்க தினமும் காலை மற்றும் மாலையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
உறை பனி தாக்கம் எதிரொலியாக ஊட்டியின் சுற்றுப்புற பகுதிகளில் தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடிகள் கருக தொடங்கி விட்டன. அதன் இலைகள் பச்சை நிறத்தில் இருந்து காய்ந்தது போல மாறி கருகி வருகிறது.
இதனால் விவசாயிகள் தேயிலை செடிகளை கருகாமல் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். ஊட்டி தாவரவியல் பூங்கா நர்சரியில் மலர் நாற்றுகள் குறிப்பிட்ட வெப்பநிலையில் வளர்க்கப்பட்டு தனியாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.
வருகிற நாட்களில் உறை பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story