அம்மா இருசக்கர வாகன திட்டம்: தகுதியானவர்கள் மானியம் பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் மானியம் பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
தமிழகத்தில் பணிக்கு செல்லும் மற்றும் சுய தொழில் செய்யும் பெண்கள் 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் பெற்று, தங்கள் பணியிடங்களுக்கு சிரமம் இல்லாமல் சென்று வர அம்மா இருசக்கர வாகன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி கிராம மற்றும் நகர்புறங்களில் இருந்து வேலைக்கு செல்லும் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைய மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் 2017-2018-ம் ஆண்டிற்கு 1,074 பயனாளிகளுக்கு மானியம் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 1,074 பேர் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். ஆனால் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் இதுவரை 353 பயனாளிகள் மட்டுமே இருசக்கர வாகனம் வாங்கி மானியம் பெற்று உள்ளனர். இத்திட்டம் தொடங்கி ஓராண்டு கடந்தும் மற்ற பயனாளிகள் மானியம் கோரி விண்ணப்பிக்க தவறியதால், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர்கள் நீக்கப்பட்டு உள்ளனர்.
எனவே புதிதாக 721 பயனாளிகள் தேர்வு செய்யப்பட இருக்கின்றனர். இதனால் மானியம் பெற தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே அம்மா இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுள்ளவர்கள் கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு இருசக்கர வாகனம் வாங்கியதற்கான ஆவணங்கள், இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் மற்றும் பணிச்சான்றோடு தங்கள் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஒருவார காலத்திற்குள் விண்ணப்பித்து மானிய தொகை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story