கரூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலி


கரூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 30 Nov 2018 4:00 AM IST (Updated: 30 Nov 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் ஸ்கூட்டர் மீது பஸ் மோதியதில் என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

கரூர்,

கரூர் காந்திகிராமம் அமர்ஜோதிகார்டன் பகுதியை சேர்ந்தவர் ரெங்கநாதன். இவரது மனைவி புவனேசுவரி. இவர் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர்களுடைய மகன் கவின் (வயது 20). இவர், கோவையிலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் படித்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவர், நேற்று மாலை கரூரில் உள்ள ஒரு தியேட்டரில் திரைப்படம் பார்ப்பதற்காக வீட்டிலிருந்து புறப்பட்டு ஸ்கூட்டரில் வந்து கொண்டிருந்தார். கரூர் மனோகரா கார்னரை கடந்து மேற்கு பிரதட்சனம் ரோட்டில் பஸ் நிலையம் அருகே வந்த போது, அந்த வழியாக வந்த தனியார் மினிபஸ் ஒன்று எதிர்பாராதவிதமாக கவினின் ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்த கவின் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். விபத்து நடந்ததும் டிரைவர் பஸ்சை நிறுத்தி விட்டு ஓடி விட்டார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கரூர் டவுன் போலீசார், கவினின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கவின் திடீரென விபத்தில் இறந்தது குறித்து அறிந்ததும் புவனேசுவரி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் உள்ளிட்டோர் பதறி அடித்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். பின்னர் கவினின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அரசு ஊழியர்கள் பலர் ஆஸ்பத்திரிக்கு வந்து புவனேசுவரி குடும்பத்துக்கு ஆறுதல் கூறினார்கள். மேலும் இந்த விபத்து குறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மினிபஸ் டிரைவரை தேடி வருகின்றனர். விபத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியின் மகன் பலியான சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கரூரில் ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்ட போதும், கோர்ட்டில் வழக்கு உள்ளிட்ட காரணங்களால் அது கிடப்பில் போடப்பட்டு உள்ளது. இதனால் கரூர் பஸ் நிலையத்திற்குள் போதிய இடமின்றி பஸ்கள் எளிதில் செல்ல முடியாமல் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. மேற்கு பிரதட்சணம் ரோடு குறுகலானதாக இருப்பதால், மனோகரா கார்னரில் இருந்து அந்த வழியாக வரும் வாகனங்கள் மற்றும் பஸ் நிலையத்தில் இருந்து வரும் வாகனங்கள் உள்ளிட்டவை எளிதில் செல்ல முடியாமல் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன. எனவே கரூர் பஸ் நிலையம் மற்றும் மினிபஸ்கள் நிறுத்தும் இடத்தில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மினிபஸ்களின் இயக்கத்தை கண்காணித்து கரூர் நகருக்குள் தாறுமாறாக ஓட்டி செல்லும் டிரைவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story