தஞ்சையில் சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி கணவன்- மனைவி மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்


தஞ்சையில் சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி கணவன்- மனைவி மீது போலீஸ் சூப்பிரண்டிடம் புகார்
x
தினத்தந்தி 29 Nov 2018 10:45 PM GMT (Updated: 29 Nov 2018 9:19 PM GMT)

தஞ்சையில் சீட்டு நடத்தி ரூ.5 கோடி மோசடி செய்ததாக கணவன்- மனைவி மீது போலீஸ் சூப்பிரண்டிடம், பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர்,

தஞ்சையை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று தஞ்சை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்த கணவன்- மனைவி இருவரும் தஞ்சையில் தினசரி மற்றும் மாத சீட்டுகளை கடந்த 35 ஆண்டுகளாக இவர்கள் நடத்தி வந்தனர். இது தவிர சிலர் அவர்களிடம் பணமும் கொடுத்துள்ளனர். அதற்கு அவர்கள் வட்டித்தொகை கொடுத்துள்ளனர்.

சிலர் சீட்டு முடிந்த பின்னர் அந்த தொகையை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அதற்கு வட்டித்தொகை மட்டும் பெற்று வந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக அவர்களுக்கு வட்டித்தொகை வரவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்த போது கொடுத்த பணத்திற்கு கணவன்- மனைவி இருவரும் அவர்களின் குழந்தைகள் பெயரில் சொத்துக்களை வாங்கி, பின்னர் அவற்றை தங்கள் பெயருக்கு மாற்றி விற்று விட்டு ஊரை விட்டு ஓட முடிவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது.

பாதிக்கப்பட்ட 31 பேரிடம் மட்டும் ரூ.5 கோடியே 10 லட்சம் வரை மோசடி செய்துள்ளனர். இதே போல் 100-க்கும் மேற்பட்டவர்களிடம் மோசடி செய்திருக்கலாம் என கூறப்படுகிறது. எங்களது பணத்தை மோசடி செய்து பணத்தை அபகரித்துக்கொண்டு கணவன்- மனைவி மற்றும் அவருடைய மகள்கள் கூட்டாக சதி செய்துள்ளனர்.

எனவே போலீஸ் சூப்பிரண்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து சொத்துக்களை முடக்கம் செய்து, எங்கள் பணத்தை திருப்பித்தர நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறி உள்ளனர்.

Next Story