நடுக்கடலில் நடந்த அத்துமீறல்: கப்பலால் மோதி ராமேசுவரம் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படை - 4 மீனவர்களும் சிறைபிடிப்பு


நடுக்கடலில் நடந்த அத்துமீறல்: கப்பலால் மோதி ராமேசுவரம் படகை மூழ்கடித்த இலங்கை கடற்படை - 4 மீனவர்களும் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 9:37 PM GMT)

நடுக்கடலில் ராமேசுவரம் விசைப்படகை மூழ்கடித்துவிட்டு அதில் இருந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம் மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ராமேசுவரம்,

கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கி விரட்டியடிப்பதும், மீனவர்களை சிறைபிடித்துச் சென்று இலங்கை சிறையில் அடைக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. மீண்டும் இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் நடுக்கடலில் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினர் கப்பலில் அந்த வழியாக ரோந்து வந்துள்ளனர்.

நடுக்கடலில் மீன்பிடித்த ராமேசுவரம் மீனவர்களை உடனடியாக அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்துக்கொண்டே நெருங்கி வந்துள்ளனர். இந்த நிலையில் ராமேசுவரத்தை சேர்ந்த ஒரு விசைப்படகின் மீது கப்பலைக் கொண்டு பயங்கரமாக மோதினர்.

இதனால் அதில் இருந்த மீனவர்கள் ராமேசுவரத்தை சேர்ந்த காட்டுராஜா(வயது 52), தங்கவேல்(53), பார்த்திபனூரை சேர்ந்த ராமு (51), பரமக்குடியை சேர்ந்த வர்கீஸ் (45) ஆகிய 4 மீனவர்களும் செய்வது அறியாது திகைத்தனர். பின்னர் அந்த 4 மீனவர்களையும் சிறைபிடித்து தங்களது கப்பலில் ஏற்றி இலங்கைக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையே கப்பலைக் கொண்டு மோதியதால் சேதம் அடைந்த விசைப்படகு கடலில் மூழ்கிவிட்டது, என்று மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறும் போது, “இலங்கை கடற்படையின் இந்த மனிதநேயமற்ற செயல் மிகவும் வேதனையை தருகிறது. விசைப்படகு மூழ்கடிக்கப்பட்டு இருப்பது மீனவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விசைப்படகானது வேலாயுதம் என்பவருடைய மனைவி பத்மாவதிக்கு சொந்தமானதாகும். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 4 மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலில் மூழ்கடிக்கப்பட்ட விசைப்படகுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். அத்துமீறிய இலங்கை கடற்படையினர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பதுடன், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தையும் மத்திய அரசு பதிவு செய்ய வேண்டும்” என்றார்.

Next Story