தற்கொலை செய்த மாணவி உடலை வாங்க உறவினர்கள் மீண்டும் மறுப்பு: காதலன் உள்பட 2 பேர் கைது


தற்கொலை செய்த மாணவி உடலை வாங்க உறவினர்கள் மீண்டும் மறுப்பு: காதலன் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2018 10:00 PM GMT (Updated: 29 Nov 2018 9:37 PM GMT)

தற்கொலை செய்துகொண்ட மாணவியின் உடலை அவருடைய உறவினர்கள் வாங்க மீண்டும் மறுத்துவிட்டனர். தற்கொலைக்கு தூண்டியதாக அவருடைய காதலன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிவகங்கை,

சிவகங்கை மாவட்டம் பாகனேரியைச் சேர்ந்தவர் பாண்டியன். அவருடைய மகள் பிருந்தா(வயது 22). தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். இவரும் இதே ஊரைச் சேர்ந்த முத்து மகன் அசோக்குமார் என்பவரும் காதலித்தனர். இதற்கு ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததை தொடர்ந்து மதகுபட்டி, சிவகங்கை மகளிர் போலீசில் புகார் செய்யப்பட்டது.

இந்தநிலையில் மாணவி பிருந்தா கடந்த 24-ந் தேதி விஷம் குடித்தார். அவரை சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி பிருந்தா கடந்த 27-ந் தேதி இறந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாண்டி, தனது மகளின் சாவுக்கு அசோக்குமார், அவரது தாய் செல்வி மற்றும் உறவினர்கள் ரேணுகாதேவி, கணேசன், கண்ணாத்தாள், சூரியபிரகாஷ் ஆகியோர்தான் காரணம் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீசில் புகார் கொடுத்தார்.

மேலும் பிருந்தாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி சிவகங்கை மருத்துவமனை அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் இறந்த மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தையில் போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட அவர்கள், சம்பந்தபட்டவர்கள் அனைவரையும் கைது செய்யும் வரை மாணவி பிருந்தாவின் உடலை வாங்க மறுத்து விட்டனர். அதைத்தொடர்ந்து அவரது உடல் சிவகங்கை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

இந்தநிலையில் மதகுபட்டி போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக அசோக்குமார், அவரது தம்பி கணேசன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தனர். ஆனால் அனைவரையும் கைது செய்தால் தான் உடலை வாங்கி செல்வோம் என்று மீண்டும் கூறியதை தொடர்ந்து, பிருந்தாவின் உடல் தொடர்ந்து அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜனநாயக மாதர் சங்கத்தின் பொது செயலாளர் சுகந்தி, இந்திய மாணவர் சங்கத்தின் செயலாளர் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் மதி உள்பட 30 பேர் மீது சிவகங்கை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Next Story