‘ரோஷினி’ திட்டம் குறித்து செயல் விளக்கம் பெங்களூருவில் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு


‘ரோஷினி’ திட்டம் குறித்து செயல் விளக்கம் பெங்களூருவில் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2018 5:09 AM IST (Updated: 30 Nov 2018 5:09 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் பள்ளி ஆசிரியர்களுக்கு 4 மாத சம்பளம் வழங்கவில்லை என்று மாநகராட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் கூறினார்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகராட்சி மன்ற மாதாந்திர கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில், மத்திய மந்திரி அனந்தகுமார், முன்னாள் மத்திய மந்திரி ஜாபர்ஷெரீப், நடிகர் அம்பரீஷ் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் மாநகராட்சி மன்றத்தின் 2-வது நாள் கூட்டம் மேயர் கங்காம்பிகே தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு கமிஷனர் ரன்தீப், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்பு, காங்கிரஸ் கவுன்சிலர் லதா, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து மாநகராட்சி பள்ளிகளில் அமல்படுத்தப்பட்டுள்ள ‘ரோஷினி’ திட்டம் குறித்து நவீன கருவிகளை கொண்டு செயல் விளக்கம் அளித்தார். நவீன தொழில்நுட்பங்கள் மூலம் கற்பித்தல், ஆசிரியர்களுக்கு பல்வேறு வகையான பயிற்சிகள் வழங்கப்படுவது குறித்து அவர் தெரிவித்தார்.

அப்போது எதிர்க்கட்சி தலைவர் பத்மநாபரெட்டி எழுந்து, “பெங்களூரு மாநகராட்சியில் பள்ளி ஆசிரியர் களுக்கு கடந்த 4 மாத சம்பளம் வழங்கவில்லை. மேலும் துப்புரவு தொழிலாளர்களை விட அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கப்படுகிறது. முதலில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்” என்றார்.

காங்கிரசை சேர்ந்த கவுன்சிலர் குணசேகர் பேசுகையில், “மைக்ரோசாப்ட் நிறுவனம் பெங்களூரு மாநகராட்சி பள்ளிகளில் சர்வதேச அளவில் தரமான கல்வியை வழங்க முன்வந்துள்ளது. இதற்காக அந்த நிறுவனம் ரூ.500 கோடி செலவு செய்கிறது. இது வரவேற்கக்கூடியது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இத்தகைய கல்வி முறை இல்லை. இதன் மூலம் நாட்டின் எதிர்கால தலைவர்களாக ஆகக் கூடிய குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்கும். ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி வழங்க வேண்டியது அவசியம்” என்றார்.

பா.ஜனதாவை சேர்ந்த கவுன்சிலர் டாக்டர் ராஜூ, “ரோஷினி என்றால் என்ன?. அது இந்தி வார்த்தை. கன்னடத்தில் உங்களுக்கு வார்த்தைகளே கிடைக்கவில்லையா? திட்டங்களுக்கு பெயர் வைக்கும்போது, கன்னட சொற்களை பயன்படுத்துங்கள்” என்றார்.

‘ரோஷினி’ திட்ட அதிகாரி பேசும்போது, “இந்த திட்டம் அமெரிக்காவில் கூட இல்லை. இந்த திட்டத்திற்கு இன்னும் ஓரிரு மாதங்களில் அமெரிக்காவின் விருது கிடைக்கும். இந்த திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகளை வழங்கி இருக்கிறோம். சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

Next Story