மேல் ஆதனூரில் மனுநீதி நாள் முகாம்: 475 பேருக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள் - சப்-கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்


மேல் ஆதனூரில் மனுநீதி நாள் முகாம்: 475 பேருக்கு ரூ.3 கோடி நலத்திட்ட உதவிகள் - சப்-கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Nov 2018 3:15 AM IST (Updated: 30 Nov 2018 5:27 AM IST)
t-max-icont-min-icon

மேல் ஆதனூரில் நடந்த மனுநீதி நாள் முகாமில் சப்-கலெக்டர் பிரசாந்த் 475 பேருக்கு ரூ.3 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராமநத்தம், 

ராமநத்தம் அருகே உள்ள மேல்ஆதனூர் கிராமத்தில் மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு விருத்தாசலம் சப்-கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். திட்டக்குடி தாசில்தார் சத்யன் முன்னிலை வகித்தார். மண்டல துணை தாசில்தார் ஜெயச்சந்திரன் வரவேற்றார்.

இதில் முதியோர் மற்றும் திருமண உதவித்தொகை, பட்டா மாற்றம், வீட்டுமனை பட்டா, ஸ்மார்ட் கார்டு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 600-க்கும் மேற்பட்ட மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

அவற்றில் 475 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதையடுத்து சப்-கலெக்டர் பிரசாந்த், 475 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 8 லட்சத்து 55 ஆயிரத்து 500 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். இதில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், மங்களூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைச்செல்வி, ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் ரத்னாவதி, கால்நடை உதவி மருத்துவர் மைதிலி, உதவி வேளாண் அலுவலர் கணேஷ்பாலன், உதவி தோட்டக்கலை அலுவலர் கோவிந்தராஜ், வட்ட வழங்கல் அலுவலர் எழில்வளவன் ஆகியோர் தங்களது துறை சார்ந்த திட்டங்கள் குறித்து பேசினர்.

முகாமையொட்டி வேளாண்துறை, தோட்டக்கலைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. முகாமில் வருவாய் ஆய்வாளர்கள் தொழுதூர் சீனிவாசன், திட்டக்குடி மேற்கு வேல்முருகன், பெண்ணாடம் மோகன்தாஸ், கிராம நிர்வாக அலுவலர்கள் துரைராஜ், செந்தில், ராசு, சுகாதார ஆய்வாளர்கள் பிரபு, உதவி வேளாண் அலுவலர்கள் வில்வேந்திரன், மேகநாதன் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திட்டக்குடி கிழக்கு வருவாய் ஆய்வாளர் தேவநாதன் நன்றி கூறினார். 

Next Story