முக்கிய கொலை வழக்குகள் விசாரணை: நெல்லை கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் சோதனை
நெல்லை கோர்ட்டில் முக்கிய கொலை வழக்குகளில் நேற்று விசாரணை நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாகனங்கள் சோதனைக்கு பிறகே கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.
நெல்லை,
நெல்லை கோர்ட்டில் முக்கிய கொலை வழக்குகளில் நேற்று விசாரணை நடைபெற்றதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. வாகனங்கள் சோதனைக்கு பிறகே கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டன.
கொலை வழக்கு
தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்த சிங்காரம் என்பவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவரை தூத்துக்குடி கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக போலீசார் ஜீப்பில் அழைத்துச் சென்றனர். கே.டி.சி. நகரில் போலீஸ் ஜீப்பை வழிமறித்த கும்பல், அவரை வெட்டி கொலை செய்தனர்.
இது தொடர்பான வழக்கு நெல்லை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களை கொலை செய்ய சிலர் வக்கீல் வேடத்தில் கோர்ட்டு வளாகத்துக்கு வருவதாக உளவுப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு விசாரணைகளின் போது கோர்ட்டு வளாகத்தில் ஆயுதங்களுடன் வந்தவர்களை போலீசார் அடுத்தடுத்து மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
பலத்த பாதுகாப்பு
நேற்று அந்த வழக்கு விசாரணை நடந்தது. இதுதவிர மேலும் 2 முக்கிய கொலை வழக்குகளின் விசாரணையும் நெல்லை கோர்ட்டில் நடைபெற்றது. இதையொட்டி நேற்று கோர்ட்டு வளாகத்தில் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணாசிங் தலைமையில் பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் சக்கரவர்த்தி, இன்ஸ்பெக்டர்கள் ராமையா, பர்ணபாஸ் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வாகனங்கள் சோதனை
கோர்ட்டு வளாகத்தில் உள்ள 3 நுழைவு வாசல்கள் வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள்களை போலீசார் பலத்த சோதனை செய்த பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். மேலும் கோர்ட்டுக்கு வந்தவர்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர். இதனால் கோர்ட்டு வளாகத்தில் நேற்று பரபரப்பு காணப்பட்டது.
Related Tags :
Next Story