பெண்கள் விடுதி–இல்லங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்


பெண்கள் விடுதி–இல்லங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2018 3:00 AM IST (Updated: 30 Nov 2018 5:02 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இதுவரை பதிவு செய்யப்படாத பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இதுவரை பதிவு செய்யப்படாத பெண்கள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறிஇருப்பதாவது:–

பெண்கள் விடுதிகள் 

தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் வளர் இளம்பெண்கள் பள்ளி விடுதிகள், பெண்கள் விடுதிகள், இல்லங்கள் அனைத்தும் பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் ஒழுங்குமுறைப்படுத்துதல் சட்டத்தின் கீழ் பதிவு செய்து உரிமம் பெற்று செயல்பட வேண்டும்.

இந்த சட்டத்தின் கீழ் உரிமம் பெற மாவட்ட கலெக்டர், தூத்துக்குடி என்ற பெயருக்கு ரூ.3 ஆயிரத்துக்கு வங்கி காசோலை அல்லது வங்கி வரைவோலை எடுக்கப்பட வேண்டும். விடுதிகள் மற்றும் இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் தீயணைப்பு சான்று, கட்டிட உறுதித்தன்மை சான்று, சுகாதார சான்று, கட்டிட உரிமம் சான்று, பணியாளர்களின் விவரம், உள்ளுறைவோர்களின் விவரம், தணிக்கை அறிக்கை சான்று, வருடாந்திர அறிக்கை, விடுதியின் உணவூட்ட முறை போன்ற விவரங்களுடன் ஒரு மாதத்திற்குள் இந்த சட்டத்தின் கீழ் உரிமம் பெற விண்ணப்பிக்க வேண்டும்.

நடவடிக்கை 

உரிமம் பெறாமல் செயல்படும் விடுதிகள், இல்லங்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பான விவரங்களுக்கு தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி என்ற முகவரியிலும், 0461–2325606 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story