தூத்துக்குடி அருகே தனியார் கல்லூரிக்கு அறிக்கை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார மேற்பார்வையாளர் கைது


தூத்துக்குடி அருகே தனியார் கல்லூரிக்கு அறிக்கை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார மேற்பார்வையாளர் கைது
x
தினத்தந்தி 30 Nov 2018 10:00 PM GMT (Updated: 30 Nov 2018 11:39 AM GMT)

தூத்துக்குடி அருகே தனியார் கல்லூரிக்கு சுகாதார சான்றுக்கான அறிக்கை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

சாயர்புரம்,

தூத்துக்குடி அருகே தனியார் கல்லூரிக்கு சுகாதார சான்றுக்கான அறிக்கை வழங்க ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சுகாதார மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்டார்.

சுகாதார மேற்பார்வையாளர்

தூத்துக்குடி அருகே உள்ள சிவகளையை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் ஆழ்வாரப்பன் (வயது 55). இவர் ஏரல் வட்டார சுகாதார மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் சாயர்புரம் போப் கல்வியியல் கல்லூரிக்கு சுகாதார சான்று பெறுவதற்காக, சுகாதார பணிகள் துணை இயக்குனரிடம் விண்ணப்பிக்கப்பட்டு இருந்தது. நீண்ட நாட்கள் ஆகியும் சான்றிதழ் வழங்கப்படவில்லை. சுகாதார மேற்பார்வையாளர் ஆழ்வாரப்பன் ஆய்வறிக்கை அனுப்பாததால் சுகாதார சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருவது தெரியவந்தது. இதனால் கல்லூரியில் பணியாற்றி வரும் ஜெயக்குமார் என்பவர் ஆழ்வாரப்பனை அணுகினார். அப்போது ஆழ்வாரப்பன் சான்று அறிக்கை வழங்குவதற்கு ரூ.25 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

கைது

இதுகுறித்து ஜெயக்குமார் தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாரிடம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தொடர்ந்து நேற்று காலையில் ஆழ்வாரப்பன் பணத்தை பெறுவதற்காக கல்லூரிக்கு வந்தார். கல்லூரி முன்பு வைத்து, அவரிடம் ரூ.25 ஆயிரத்தை ஜெயக்குமார் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த ஊழல் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாமலை தலைமையிலான போலீசார் விரைந்து சென்று ஆழ்வாரப்பனை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து அவருடைய வீடு மற்றும் அலுவலகத்திலும் போலீசார் சோதனை நடத்தினர்.

தனியார் கல்லூரிக்கு சுகாதார சான்றுக்கான அறிக்கை ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கி சுகாதார மேற்பார்வையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story