ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 30 Nov 2018 9:30 PM GMT (Updated: 30 Nov 2018 3:15 PM GMT)

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். நுழைவுத்தேர்வுக்கான வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

இதுகுறித்து தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் ஆல்பிஜான் வர்க்கீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:–

தொடக்க விழா 

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் கல்வி பயிலும் மாணவ–மாணவிகளுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர்பதவிகளுக்கான நுழைவுத்தேர்வுகள் குறித்த வழிகாட்டுதல் மற்றும் பயிற்சி வகுப்பு மாநகராட்சி சார்பில் தொடங்கப்பட உள்ளது.

இதன் தொடக்க விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்கிறது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா, உதவி கலெக்டர் சிம்ரான்ஜித் சிங் கலோன், உதவி கலெக்டர் (பயிற்சி) அனு மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவ–மாணவிகளை ஊக்கப்படுத்தி பேசுகின்றனர்.

பயிற்சி 

இதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் குரூப்–1, குரூப்–2 ஆகிய தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான நுட்பங்கள், புத்தகங்கள் மற்றும் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அன்றைய தினமே மாதிரி தேர்வும் நடத்தப்படுகிறது. மாதிரி தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ–மாணவிகளுக்கு மாநகராட்சி சார்பில் இலவச பயிற்சி மற்றும் மாவட்டத்தில் பணிபுரியும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் நேரடி வழிகாட்டுதல் மற்றும் அறிவுரைகள் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்து அரசு வேலைவாய்ப்பை எதிர்நோக்கி உள்ள இளைஞர்களுக்கு பயிற்சி வகுப்புகள் வாரத்தின் இறுதிநாட்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அனுபவமிக்க ஆசிரியர்கள் மற்றும் சிறந்த கல்வியாளர்களை கொண்டு இலவசமாக பயிற்றுவிக்கப்பட உள்ளது. எனவே அரசு வேலைக்கான போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ–மாணவிகள் மற்றும் பட்டப்படிப்பை முடித்த இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 99944 87627 என்ற எண்ணில் வாட்ஸ்–அப், எஸ்.எம்.எஸ். மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு ஆல்பிஜான் வர்க்கீஸ் தெரிவித்து உள்ளார்.


Next Story