மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் 183 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உதவி கலெக்டர்கள் வழங்கினர்


மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் 183 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உதவி கலெக்டர்கள் வழங்கினர்
x
தினத்தந்தி 30 Nov 2018 11:00 PM GMT (Updated: 30 Nov 2018 4:57 PM GMT)

ஒன்னுகுறுக்கை, சாலமரத்துப்பட்டி கிராமங்களில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம்களில் 183 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர்கள் விமல்ராஜ், சரவணன் ஆகியோர் வழங்கினர்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம் ஜெக்கேரி ஊராட்சி ஒன்னுகுறுக்கை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு ஓசூர் உதவி கலெக்டர் விமல்ராஜ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். இதில் முதியோர் உதவித்தொகை, வீட்டுமனை பட்டா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, புதிய ரேஷன் கார்டு, வேளாண் எந்திரங்கள் என மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ. 35.86 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் வழங்கினார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அதிகாரிகள் ராஜேஷ், மஞ்சு குமார், ஊராட்சி செயலாளர் மஞ்சுநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தேன்கனிக்கோட்டை தாசில்தார் வெங்கடேசன் நன்றி கூறினார்.

ஊத்தங்கரையை அடுத்த சாலமரத்துப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. முகாமிற்கு உதவி கலெக்டர் சரவணன் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெற்றார். தாசில்தார் மாரிமுத்து வரவேற்றார். மண்டல துணை தாசில்தார்கள் செந்தில்குமார், அருள், வட்ட வழங்கல் அலுவலர் அருள்மொழி, வருவாய் ஆய்வாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முகாமில் பட்டா மாற்றம், புதிய குடும்ப அட்டை வழங்குதல், ஓய்வூதியம், விபத்து நிவாரணம் என மொத்தம் 45 பயனாளிகளுக்கு ரூ.6 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உதவி கலெக்டர் சரவணன் வழங்கினார். முகாமில் வருவாய்துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் தனி தாசில்தார் முருகன் நன்றி கூறினார்.

Next Story